25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுடன் இந்தியத் தூதுவர் திடீர்ச் சந்திப்பு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று புதன்கிழமை இரவு சந்தித்து விரிவான  பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் வாஸஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
தற்போதைய அரசியல் நிலைவரங்கள், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்கள் உட்பட பல தரப்பட்ட விடயங்கள் குறித்தும் இருவரும் பேசினர்.
இந்தச் சந்திப்புக் குறித்து இரா.சம்பந்தன் தெரிவித்தவைபோதுது, “முக்கிய விடயங்கள் குறித்துப் பேசினோம். தமிழர் தரப்பில் கூற வேண்டிய விடயங்களை நான் தெளிவுபடுத்தினேன். அரசியல் தீர்வு முயற்சிகள், புதிய அரசமைப்பு உருவாக்கம், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை அடுத்து ஏற்பட்டுள்ள விடயங்கள், இரு நாட்டு உறவுகள், இந்தியப் பிரதமருடன் தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள், ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை விடயம் போன்ற பல விவகாரங்கள் குறித்து பேசினோம். தொடர்ந்தும் பேசுவோம்” எனக் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய உதவித்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் மோடியும் கலந்துகொள்ள வேண்டும் என இரா.சம்பந்தன் இந்தச் சந்திப்பின் போது இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார் எனவும் அறிய வந்தது. யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் இந்திய ரூபா 100 கோடி (இலங்கைப் பணத்தில் சுமார் 250 கோடி ரூபா) செலவில் 12 அடுக்கு மாடி கலாசார மண்டபக் கட்டடத் தொகுதி ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் திறப்பதற்கு தயாராகவே உள்ளது.
அதனை அமைத்துத் தந்த இந்தியப் பிரதமர் மோடி நேரில் வருகை தந்து அதனைத் திறக்கும் நிகழ்விலும் பங்குபற்ற வேண்டும் எனக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தனது விருப்பத்தை இந்தியத் தூதரிடம் தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவரின் விருப்பத்தினை உரிய தரப்பிற்கு அனுப்புவதாக இதன் போது இந்தியத் தூதுவர் பதிலளித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles