ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பை தேர்வுசெய்தார். இதனால் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
ஆரம்ப வீரர்களாக களமிறஙகிய நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் அமர்க்களமாக ஆட்டத்தை தொடங்கினர்.
சந்தீப் ஷர்மாவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓட விட்ட நிதிஷ் ராணா தொடர்ந்தும் அதிரடி காட்டினார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களை கொல்கத்தா அணி பெற்றுக் கொண்டது.
அதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வந்ததும் இந்த ஜோடி பிரிந்தது. அவரது பந்து வீச்சில் சுப்மான் கில் ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். ரஷித்கான் ஒரு பக்கம் ஓட்ட வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் ஏனைய பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்கினர்.
2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ராகுல் திரிபாதியின் பந்துகளை சிதறடித்தார். புவனேஷ்வர்குமாரின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 19 ஓட்டங்களை திரட்டினர்.
தனது முதல் 2 ஓவர்களில் 21 ஓட்டங்களை வழங்கிய நடராஜன் தனது 3 ஆவது ஓவரில் இந்த கூட்டணியை உடைத்தார்.
ஓட்ட எண்ணிக்கை 146 ஆக (15.2 ஓவர்) உயர்ந்த போது திரிபாதி 29 பந்துகளில் 53 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து வெளியேறினார்.
மறுபுறம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ராணா தனது பங்குக்கு 80 ஓட்டங்களை (56 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதற்கிடையே ஆந்த்ரே ரஸ்செல் (5 ஓட்டம்) ரஷித்தின் சுழலில் சிக்கினார். கடைசி கட்டத்தில் அணித் தலைவர் இயான் மோர்கன் 2 ஓட்டங்களிலும், ஷகிப் அல்-ஹசன் 3 ஓட்டத்துடனும் பிடிகொடுத்து வெளியேறினர்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
188 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி ஆடியது.
தொடக்க ஆட்டக்காரரும், அணித் தலைவருமான வோர்னர், சிரேஷ்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வீசிய முதல் ஓவரில் வழங்கிய பிடி வாய்ப்பை கம்மின்ஸ் நழுவ விட்டார்.
எனினும் வோர்னர் மூன்று ஓட்டத்துடன் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக்கிடம் பிடிகொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் விருத்திமான் சஹாவும் 7 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்காக மனிஷ் பாண்டேவும், ஜோனி பெயர்ஸ்டோவும் கைகோர்த்து அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர்.
இவர்கள் இருவரும் இணைப்பாட்டமாக மொத்தம் 92 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் பெயர்ஸ்டோ 55 ஓட்டங்களுடன் (40 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்ஸர்) வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய மொஹமட் நபி 14 ஓட்டங்களுடனும், விஜய் சங்கர் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஒரு ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட ரஸ்செல் 11 ஓட்டங்களை மாத்திரம் வழங்கினார்.
20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 5 விக்கெட்டுக்கு 177 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது.
தன் மூலம் 10 ஓட்டம் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.
மனிஷ் பாண்டே 61 ஓட்டங்களுடனும் (44 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்ஸர்), அப்துல் சமாத் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக நிதிஷ் ராணா தெரிவானர்.
மும்பையில் இன்று ஆரம்பமாகும் தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.