28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனாவால் கொழும்பில் 16 மரணங்கள் -விஷேட காரணி தாக்கம் செலுத்துகிறதா? ஆய்வு அவசியம் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் அண்மையில் பதிவான 16 கொரோனா மரணங்களில் பெரும்பாலானவை கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளிலேயே பதிவாகியுள்ளன. இந்த மரணங்களில் ஏதேனும் விஷேட காரணி தாக்கம் செலுத்துகின்றதா? என்பது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரையில் நாம் தொற்றாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், இனிவரும் நாள்களில் மரணங்களைப் பற்றி பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. டிசெம்பர் மாத ஆரம்பத்தில் கொரோன மரணங்கள் பற்றியே கூடுதல் கவனம் செலுத்த வேண்டியேற்படும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுப்பது அத்தியாவசியமானது. ஒன்பது மாதங்களில் 13 மரணங்கள் என்ற நிலைமை தற்போது இரு வாரங்களில் 16 மரணங்கள் என்ற நிலைமையாக மாறியுள்ளது. இது மிகவும் அபாயமான நிலைமை.

அண்மையில் பதிவாகிய 16 மரணங்களில் அதிகமானவை கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்டவையாகும். கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகளில் பரவும் வைரஸால் பதிவாகும் மரணங்களுக்கு ஏதேனும் விஷேட காரணங்கள் உள்ளனவா? என்பது தொடர்பில் விரைவாக ஆராய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

வைரஸ் மாற்றமடைந்துள்ளதா? அல்லது அதற்கு ஏற்றவகையில் சுற்றுச்சூழல் இசைவாக்கமடைந்துள்ளதா? அல்லது மக்களின் நடமாட்டமா? இதற்குக் காரணம் என்று துரிதமாகக் கண்டறியப்பட வேண்டும். எனவே கொரோனா மரணங்கள் தொடர்பில் மீளாய்வு செயல்பாடுகளை உடன் ஆரம்பிக்க சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகின்றோம். அண்மையில் பதிவாகிய ஒவ்வொரு மரணங்கள் தொடர்பிலும் வௌ;வேறாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

கடந்த வியாழக்கிழமை 383 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் அல்லது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள். இதன் மூலம் வழமைக்கு மாறாக சமூகத்திலிருந்து பெருமளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.

25 மாவட்டங்களிலும் 60 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளுக்கும் அதிகமாக வைரஸ் பரவியுள்ள நிலையில், நாட்டில் காணப்படுகின்ற சிவப்பு வலயங்களை மேலும் விஸ்தரிக்காமல் அவற்றைக் குறைக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது எம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles