கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர் என கொழும்பு அரச அதிபர் பிரதீப் யசரட்ன தெரிவித்தார்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் மேல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்தால் எனக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு வார காலத்துக்கு நிவாரணம் வழங்கவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பிரதமர் அலுவலகம் மூலம் எமக்கு சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அனைத்துக் குடும்பங்களுக்கும் இந்த நிவாரண உதவியை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கையைக் கவனத்தில் கொள்ளாது ஒரு குடும்பத்துக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உலர் உணவுப்பொருள்கள் அடங்கிய பொதிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு உலர் உணவுப்பொருள்களை வழங்க 13 பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.