கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டுகளுக்கு பின் டெய்லர் ராஜா சிக்கினார்!

0
13

கோவையில் 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 10) சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார்.

கோவையில், 1998ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

அதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 58 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் படுகாயம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை விசாரிக்கும் வழக்கு, கோவை மாநகர பொலிஸிடம் இருந்து, சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணைக்கு பின், தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை பொலிஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டிக்கப்பட்டனர். இன்னும் சிலர் சிறையில் உள்ளனர். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் மட்டும் பொலிஸில்  சிக்காமல் தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 10) முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார். இன்று டைலர் ராஜாவை பொலிஸார்  கோவை அழைத்து வருகின்றனர்.

இதையொட்டி கோவை மாநகரில்  பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.