சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாத எமது கடன் பத்திரங்களுக்கு மீண்டும் அங்கீகாரத்தை ரணில் விக்ரமசிங்கவே பெற்றுக்கொடுத்ததாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மினுவங்கொடையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
‘நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது எதிர்கட்சித் தலைவர், சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க முடியாது தப்பி ஓடினார்கள். ஆட்சியைப் பொறுப்பேற்று நடத்தமுடியாத இந்தத் தலைவர்களுக்கு வாக்களிக்க முடியாது என்ற தெளிவான தீர்மானத்திற்கு மக்கள் வந்துள்ளனர்.
ஆனால், இந்நாட்டுக்கு ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் நாடு அராஜகமானது. அப்போது மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ரணில் விக்ரமசிங்க ஆட்சியை ஏற்றார். மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அந்த மாபெரும் பொறுப்பை ஏற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அவருடன் கைகோர்த்தனர்.
ஆட்சி என்பது இலகுவான விடயம் அல்ல என்பதை சஜித் பிரேமதாஸவும், அநுரகுமார திஸாநாயக்கவும் அன்றே ஏற்றுகொண்டு விட்டனர். இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஏனையோரை விட கல்வி அறிவிலும் திறமையிலும் அவர் முன்னிலையில் உள்ளார்.
பொருளாதார நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில், சர்வதேச தலைவர்களுடன் தொலைபேசி ஊடாகவேனும் கதைத்து அவர்களின் ஆதரவுகளைப் பெறக்கூடிய ஒரே ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. இவ்வாறான திறமையான ஒருவர் இருக்கும்போது, வேறொருவருக்கு ஆட்சியை வழங்கினால் எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாத எமது கடன் பத்திரங்களுக்கு மீண்டும் அங்கீகாரத்தை ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொடுத்தார். அவர் தனது உலகலாவிய தொடர்புகள் மூலம் இதனை செய்தார். மீண்டும் அத்தியாவசியப் பொருட்களை எமது நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடிந்தது.
அன்று எமது நாட்டில் இருந்த பொருளாதார நிலைமை எமக்கு நினைவிருக்கிறது. தற்போது அது மீண்டு வருகின்றது. எனவே இதுவரை முன்னெடுத்த வேலைத்திட்டங்களைத் தொடர்ந்தும் கொண்டுசெல்ல, எமது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நமது வாக்குகளை அளித்து இந்நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் அவரைத் தெரிவுசெய்வோம்.’