ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ சர்வதேச நன்கொடையாளர் மகாநாட்டை நடத்தவுள்ளார் என்று தெரிவித்திருக்கின்றார். இதே போன்றதொரு வாக்குறுதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போதும், தெரிவித்திருந்தார். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றதும் அவரின் வாக்குறுதி காணாமல் போய்விட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை வேட்பாளர்கள் அனைவருமே வாக்குறுதிகளைத் தாராளமாக வழங்குவதுண்டு. ஆனால், ‘ஆற்றை கடக்கும் வரையில்தான் அண்ணன் தம்பி – அதன் பின்னர் நீ யாரோ – நான் யாரோ’ என்பது போல் நடந்துகொள்வது உண்டு. சஜித் பிரேமதாஸவின் சர்வதேச நன்கொடையாளர் மகாநாட்டின் கதையும் அப்படியான ஒன்றுதான்.
விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சு காலத்தில் 2003 இல் சர்வதேச நன்கொடையாளர் மகாநாடு ஒன்று ரோக்கியோவில் நடைபெற்றது. இதில், 51 நாடுகள் பங்குபற்றியிருந்தன. இருபது சர்வதேச நிதி முகவரமைப்புகள் பங்குகொண்டிருந்தன.
4.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டியெழுப்பும் நோக்கிலேயே குறித்த மகாநாடு நடைபெற்றது. இந்த மகாநாட்டை சமாதான பேச்சின் ஒரு பங்காளரான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிராகரித்திருந்தது. விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார கட்டமைப்புக்கான கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்திருந்த நிலையிலேயே விடு தலைப் புலிகள் அமைப்பு குறித்த மகாநாட்டை புறக்கணித்திருந்தது.
இருக்கின்ற அரசியல் அமைப்பின்கீழ் அரசாங்கம் சில மாற்று ஏற்பாடுகளை முன்வைத்தபோதிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத் தில் விடுதலைப் புலிகளின் பங்குபற்றல் இன்றியே குறித்த மகாநாடு நடைபெற்றது. அவ்வாறானதொரு மகாநாட்டை நடத்தப் போவதாகவே சஜித் கூறுகின்றார்.
எந்த அடிப்படையில் அவ்வாறானதொரு மகாநாட்டை நடத்த முடியும்? அதில், தமிழ் மக்களின் சம அந்தஸ்துக்கான இடம் என்ன? வடக்கு, கிழக்கின் அதிகாரத்தை தீர்மானிப்பதில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பங்களிப்பும் இல்லாதபோது அவ்வாறானதொரு மகாநாடு நடைபெற்றால் கூட அதனால் தமிழ் மக்கள் பயனடைவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வடக்கு, கிழக்கை மையப்படுத்தி இவ்வாறான கொடையாளர் மகாநாடு நடத்தப்படுவதற்கு முன்னர் முதலில், வடக்கு – கிழக்கு மாகாண சபை நிர்வாகம் தடையின்றி இயங்க வேண்டும்.
ஆளுநரின் தேவையற்ற தலையீடுகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். தற்போது, மாகாண சபைகளுக்கான அரசியல் தலைமைத்துவம் இல்லாத நிலையில் ஆளுநர்கள் தனிக்காட்டு ராஜாக்களாகவே நடந்து கொள்கின்றனர். அவர்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டுப் பழகிய அதி காரிகள் குழு மத்திக்கு அடிபணியும் அதிகாரத் தரப்பாகவே இருக் கின்றது.
மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை திட்டமிட்டு புறக் கணிப்பதன் மூலம் மத்திக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கும் அதி காரிகள் குழுவொன்று திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. இதன்மூலம் மாகாண சபையை எப்போதுமே, சிக்கலானதொரு நிர்வாகக் கட்டமைப்பாகக் காட்டுவதுதான் நோக்கமாகும். இந்த விடயங்களை சரி செய்யாமல் நன்கொடையாளர் மகாநாடு நடத்துவதால் என்ன பயன்?