சுனாமி நிவாரண நிதியை கொள்ளையிட்டவர்களே ஆளும் தரப்பில் – ரஞ்சன் ராமநாயக்க

0
197

சுனாமி நிவாரண நிதியை கொள்ளையிட்டவர்களே இன்று ஆளும் தரப்பில் இருக்கின்றனர். இவர்கள் தற்போது கொரோனா வைரஸ் பரவலையும் விற்பனை செய்து நாட்டைச் சூறையாடி வருகின்றனர். தீவு நாடான இலங்கைக்கு வைரஸ் பரவல் ஏற்படுவதற்கு காரணம் ஆளும் தரப்பினரின் முறையற்ற செயல்பாடுகளே என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்படும் நெருக்கடிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அதனை விற்பனை செய்து வாழ முயற்சிக்கும் ராஜபக்‌ஷக்கள் அந்த நெருக்கடிகள் காரணமாகவே தோல்வியைத் தழுவ வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அரசமைப்பின் 20ஆவது திருத்தம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளிட்ட தனக்குச் சாதகமான விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள வைரஸ் பரவல் தொடர்பில் அக்கறை செலுத்தாது செயல்பட்டதன் விளைவே இன்று வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணம். அதேவேளை தனது தவறுகளை மறைக்கவே கொரோனா பரவல் தொடர்பில் மக்கள் மீது வீண்பழி சுமத்த முயற்சித்து வருகின்றார் என்றும் குற்றம்சாட்டினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்படும் நெருக்கடிகளை விற்பனை செய்து வாழ்வது ராஜபக்‌ஷக்களுக்கு பழக்கப்பட்ட விடயம். முன்பும் அவர்கள் இவ்வாறு செயல்பட்டமைக்கு பல சான்றுகள் உள்ளன.

சுனாமி நிதியத்தை கொள்ளையிட்டவர்களே இன்று ஆளும் தரப்பில் இருக்கின்றனர். இவர்கள் தற்போது கொரோனா வைரஸ் பரவலையும் விற்பனை செய்து நாட்டைச் சூறையாடி வருகின்றனர். தீவு நாடான இலங்கைக்கு வைரஸ் பரவல் ஏற்படுவதற்கு காரணம் ஆளும் தரப்பினரின் முறையற்ற செயல்பாடுகளே.

ஆரம்பத்தில் சீனப் பெண்ணை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றியதாகவும், வைரஸ் தொற்றிலிருந்து இலங்கை பாதுகாப்புப் பெற்றுள்ளது என்று உலக நாடுகளுக்குத் தெரிவிப்பதற்காகவும் காணொலியொன்றை தயாரித்து வெளிநாடுகளுக்கு படம்காட்டினர். சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

பின்னர் சீனா உயர் அதிகாரிகள், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் வந்தனர். இதேவேளை பிரண்டிக்ஸ் நிறுவனத்துக்கும் இந்தியாவிலிருந்து ஊழியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் எதுவும் தலையீடு செலுத்தவில்லை. இந்நிலையில், அரசாங்கம் வைரஸ் பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும்-என்றார்.