அரசியல் பழிவாங்கல் தொடர்பில் பரிசீலனைகளை செய்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மக்களின் பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தி வருகின்றது என்றும் அதற்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளதாக கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நாட்டின் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டு வருவதாகவும், அது சுயாதீன சட்டத்துறையின் செயற்பாடுகளில் தலையீடு செலுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் இவர்கள் சுட்டுக்காட்டியுளளனர்.
இதேவேளை மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்குகள் தொடர்பிலும், அது சார்ந்த சாட்சியங்கள் தொடர்பிலும் அங்கு பரிசீலனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இத்தகைய செயற்பாடுகளினால் நீதி துறைக்கு ஏற்படும் சவால்கள் தொடர்பிலும் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை , ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மக்களின் வரிப்பணத்தினாலே இயங்கி வருகின்றது. இந்நிலையில் அது மக்களின் பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதன்போது , இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மயாந்த திசாநாயக்க, நளின்பண்டார, ஜே.சீ.அலவத்துவல மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரே இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளனர்.