அரசமைப்பின் தெளிவான நோக்கத்தை மீற முற்படும் நாட்டின் ஜனநாயக மரபுகளை அச்சுறுத்தும் எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் நிராகரிக்கவேண்டும் என நாங்கள் எங்கள் மக்களிற்கும் அனைத்து வேட்பாளர்களிற்கும் நினைவுபடுத்த விரும்புகின்றோம் என இலங்கையின் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி வேண்டுமென்றே தாமதிப்பது சட்டத்தின் ஆட்சி பொதுபாதுகாப்பு ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
142 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கல்விமான்களும்,30க்கும் மேற்பட்ட அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது. பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு எதிரான ஒன்பது மனுக்களையும் ஆறுநாட்களாக செவிமடுத்த பின்னர் 24ம் திகதி ஜூலைகாலை 9.30 மணிக்கு பொலிஸ்மா அதிபரின் நியமனம் அரசமைப்பிற்கு முரணாணது போல தோன்றுகின்றது இது குறித்து முழுமையாக மீள ஆராயவேண்டும் என தீர்மானித்தது.
அதுவரை காலமும் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் பணியாற்றுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இடைக்காலத்தில் பதில்பொலிஸ்மா அதிபரை ஜனாதிபதி நியமிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த குழப்பங்களும் தெளிவின்மையும் இல்லை.தென்னக்கோனின் நியமனம் அரசமைப்பிற்கு முரணானது என உயர்நீதிமன்றம் இறுதியாக தீர்மானித்தால் அந்த நியமனம் செல்லுபடியற்றது என்பதே அதன் அர்த்தம்.
நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வழக்கு நியமனம் தொடர்பானது, பொலிஸ்மா அதிபராக பணியாற்றுபவரை அகற்றுவதற்கும் அதற்கும் எந்த தொடர்புமில்லை. பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி வெளிப்படுத்துகின்ற வேகம் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோளை நியமிப்பதில் அவர் காண்பித்த வேகத்திற்கு எதிர்மாறானதாக காணப்படுகின்றது.
தேசபந்து தென்னக்கோனின் பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் முடிவடைவதற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் ரணில்விக்கிரமசிங்க அவரை பொலிஸ்மா அதிபராக நியமித்தார்.-( அவ்வேளை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது) பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை நியமிக்கவேண்டும் எனபெப்ரவரி 25ம் திகதி கடிதத்தில் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்,அரசமைப்பு பேரவைக்கு 26ம் திகதி இந்த கடிதம் கிடைத்தது அன்றையதினமே அரசமைப்பு பேரவை இதனை ஆராய்ந்தது.
பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி வேண்டுமென்றே தாமதிப்பது சட்டத்தின் ஆட்சி பொதுபாதுகாப்பு ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தலாம். அரசமைப்பின் முடிவுகளை மறைப்பதற்காக நாடாளுமன்றத்தின் விரிவுபடுத்தும் எந்தவொரு முயற்சியும்,தவறான சமத்துவம், அரசியலமைப்பு குழப்பம்,மற்றும் தவறான முயற்சியுமாகும்.
மேலும் அரசமைப்பு பேரவையின் மீதான நீதி;த்துறையின் கண்காணிப்பை நீக்குவதற்கான அரசமைப்பு திருத்தம்,மக்களிடமிருந்து நீதித்துறை உரிமைகளை பறிக்கின்றது,சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பிற்கான உரிமையை பறிக்கின்றது எனவும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக தீர்மானித்துள்ளது.
குழப்பத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை, சட்டம் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்துவதை, ஜனநாயக செயல்முறைகளை சீர்குலைப்பதை ,உயர்நீதிமன்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதை சட்டத்திற்கு இணங்க கூடாது என்ற மறைமுக நோக்கத்தை வெளிப்படுத்துவதை ஜனாதிபதியும் அரசாங்கமும் நிறுத்தவேண்டும்.
ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் நோக்கத்துடனேயே நிறைவேற்று அதிகாரம் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என கருதும் நாங்கள், அரசமைப்பின் தெளிவான நோக்கத்தை மீற முற்படும் நாட்டின் ஜனநாயக மரபுகளை அச்சுறுத்தும் எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் நிராகரிக்கவேண்டும் என நாங்கள் எங்கள் மக்களிற்கும் அனைத்து வேட்பாளர்களிற்கும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
இலங்கையின் அரசியலை நீண்டகாலமாக பாதித்துவந்துள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஜனநாய விரோத வெளிப்பாடே தற்போதைய தற்போதைய அதிகார துஸ்பிரயோகம் என்பதை நாங்கள் கருத்தில்கொண்டுள்ளோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளிக்கும் உண்மையான வேட்பாளரே எங்கள் வாக்குகளிற்கு தகுதியானவர்.