தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தேர்தல் வாக்குறுதி என்றால் அது ஊழல்வாதிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது தான். இலங்கையைப் பொறுத்தவரையில் ஊழல்வாதிகள் என்றால் அவர்கள் அனைவருமே அரசியலில் ஆதிக்கம் செலுத்திய முக்கிய நபர்கள்தான். முக்கியமாக
ராஜபக்ஷக்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குள் தள்ளிவிட்டதாகக் கூறியே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது.
அந்த அடிப்படையில் அவர்களின் முதல் இலக்கு ராஜபக்ஷ குடும்பமாகவே இருக்க முடியும். அடுத்தது ராஜபக்ஷக்களோடு அரசியல் தேனிலவில் இருந்தவர்கள். இந்தநிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங்க காலத்தில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுவது போன்று எவர் மீதும் விசாரணைகளை முன்னெடுக்கலாம். ஏனெனில், அதற்கான அதிகாரங்கள் அவர்களிடம் உண்டு. ஆனால், அவ்வாறான விசாரணைகள் கைது வரையில் செல்லுமா அல்லது இடைநடுவில் காணாமல் போய்விடுமா என்பதில்தான் தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதி உற்றுநோக்கப்படும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரையில் இடம்பெற்ற எந்தவொரு விசாரணையிலும் முக்கிய அரசியல் தலைகள் விழுந்ததான வரலாறு இல்லை. சில தலைகள் இலக்கு வைக்கப்படுவதுண்டு ஆனால், இறுதியில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்படுவதே நடந்திருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் இடம் பெறும் விசாரணைகள் பெரும்பாலும் தூய்மையாக்கலுக்கே பயன்படுவதுண்டு.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே விசாரணைகளை முன்னெடுக்குமா அல்லது முன்னர் இடம்பெற்றது போன்று, வெறும் கண்துடைப்பாகவே முடிவுறுமா என்பதைப் பொறுத்திருந்தே நோக்க வேண்டும். ஆனால், தேசிய மக்கள் சக்தி உண்மையிலேயே நாட்டை ஊழலற்ற நாடாக்க வேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருந்தால் அதனை அவர்களால் நிச்சயம் செய்ய முடியும். ஏனெனில், அதற்கான அரசியல் பலம் வரலாற்றில் மிகவும் அரிதான வகையில் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
இந்த வாய்ப்பு இனி அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. தேசிய மக்கள் சக்தி ஒரு வாய்ப்புத்தான். ஆனால், அது வாய்ப்பாக செழித்து வளர்வதும் அல்லது முளையிலேயே கருகிவிடுவதும் அவர்களின் அணுகுமுறையிலேயே தங்கியிருக்கிறது. ஊழலை விசாரித்தல் என்பது இன்னொரு வகையில் தேசிய மக்கள் சக்தியின் – குறிப்பாக ஜே. வி. பியின் அரசியல் எதிர்காலத்துடனும் தொடர்புபட்டிருக்கிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சில அரசியல் தலைகளை முடக்காது விட்டால், அவ்வாறானவர்கள் மீண்டும் அரசியலில் தலைதூக்க அதிக வாய்ப்புண்டு. அதன் பின்னர் ஜே.வி.பின் நிலைமை சிக்கலடைந்துவிடும் என்பதையும் ஜே. வி. பியின் உள்வட்டம் உணராமல் இருக்காது. அந்த வகையில் நோக்கினால் முக்கியமாக ராஜபக்ஷக்களின் கடந்த காலத்தைத் தோண்ட வேண்டிய தேவை ஜே. வி. பிக்கு இருக்கிறது. ஆனால், ராஜபக்ஷக்களை முழுமையாக முடக்குவதற்கான ஆதாரங்களை எவ்வாறு ஒன்று சேர்ப்பது – அது முடியுமா என்பதில்தான் ஜே. வி. பியின் ஊழல்வாதிகளை
தண்டிக்கும் இலக்கின் வெற்றி தங்கியிருக்கிறது.