ஜே.வி.பியின் புதிய அரசியலமைப்பு

0
10

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதை விடவும் பொருளாhதார பிரச்னைகளுக்கே தமது அரசாங்கம் முன்னுரிமையளிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளித்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருக்கின்றார். இது ஏற்கனவே ஈழநாடு அனுமானித்திருந்த விடயம்தான் அத்துடன் இவ்வாறான நிலைமை ஏற்படும் என்பதையும் முன்னைய தலையங்கங்களில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தற்போதுள்ள நிலையில் பொருளாதார பிரச்னை முக்கியம் என்பதை விடவும், புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதில் பல சவால்கள் உண்டு. ஒரு வேளை அவ்வாறான முயற்சி அரசாங்கத்தின் வீழ்சிக்கும் வழிவகுக்கக்கூடும். புதிய அரசியலமைப்பு என்பது உண்மையில் அவசியமற்ற ஒன்று – ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவ்வாறான வாக்குறுதியை பொது மக்களுக்கு வழங்கியிருந்தது. ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கங்கள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பதுடன், அதற்கான முயற்சிகளைக் கூட மேற்கொள்ளவில்லை.

சந்திரிகா குமாரதுங்கவும் பல வாக்குறுதிகளுடன், தமிழ் மக்களின் ஆதரவில், அதிகாரத்தை கைப்பற்றியிருந்தார் ஆனால் அவர் எதிர்பார்த்தவாறு எதனையும் முன்னெடுக்க முடியவில்லை. புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் என்று தங்களை அழைத்துக் கொண்ட, ரணில் – மைத்திரி அரசாங்கம் முன்னெடுத்தது. இது தொடர்பான நம்பிக்கையை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் பரப்பியது. ஆனால், இறுதியில் அந்த முயற்சி பரிகசிக்கத்தக்க வகையில் முடிவுற்றது. அவ்வாறானதொரு நிலைமை தங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாகவே தெரிகின்றது.

உண்மையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதில் உறுதியாக இருந்தால் ஆட்சியை கைப்பற்றியவுடன் அதனை முன்னெடுத்திருக்க வேண்டும் – காலத்தை கடத்தினால் பல சவால்கள் ஏற்படும். ஆனால் தற்போது அரசாங்கம் காலம் தாழ்த்தியே அதனை முன்னெடுக்க வேண்டும் என்றவாறான அபிப்பிராயத்தையே முன்வைத்துவருகின்றது. உண்மையில் புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையா என்றால் – தேவையற்றது என்பதுதான் பதிலாக இருக்க முடியும் ஏனெனில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று, தேசிய இனப்பிரச்னையை தீர்க்கும் விருப்புறுதி அரசாங்கத்திடம் இல்லை.

இவ்வாறானதொரு நிலையில் எதற்காக புதிய அரசியலமைப்பு தொடர்பில் நேரத்தை விரயமாக்க வேண்டும். ரணில் – மைத்திரி காலம் என்பது அவ்வாறான கால விரையக் காலம்தான். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கக்கூடும். அதேவேளை, புதிய அரசியலமைப்பு விடயத்தை அரசாங்கம் உச்சரித்தால், அரசாங்க எதிர்பாளர்கள் அனைவருக்கும் மெல்லுவதற்கு அவல் கிடைத்துவிடும். எதுமின்றியே அவர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். தவிர, புதிய அரசியலமைப்பை கருத்தில் கொண்டு சாதாரண சிங்கள மக்கள் அநுர குமாரவையும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் அதிகாரத்திற்கு கொண்டுவரவில்லை.