அநுரகுமாரவின் வெற்றி மிகச்சிறந்த மாறுதல் என்று பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். சிங்கள மக்கள் தங்களுக்கான மாற்றத்தைக் காண்பித்திருக்கின்றனர். யுத்தவெற்றிவாதத்தை காலந்தோறும் புதுப்பித்து சிங்கள மக்களை ஆளலாம் என்று எண்ணிய ராஜபக்ஷக்களை முற்றிலுமாக நிராகரித்திருக்கின்றனர்.
சிந்தார்த்தன் கூறுவது போன்று சிங்கள மக்கள் மத்தியில் நிகழ்ந்த மிகச்சிறந்த மாற்றம் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான சிறந்த மாற்றம் எப்போது நிகழும்? ஒரு போதுமே நிகழாதா? தமிழ்ப் பொது வேட்பாளருக்கான மக்கள் ஆதரவு ஓரளவு திருப்தியாக இருந்தாலும்கூட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றமாகக் கருதமுடியாது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் மாற்றங்களை ஆதரிக்காதவர்களாக இருக்கின்றனரா அல்லது தமிழ் மக்களை மாற்றத்தை நோக்கி சிந்திக்க முடியாதளவுக்கு தமிழ் அரசியல்வாதிகள் செயல்படுகின்றனரா? தமிழ் மக்கள் மாற்றத்தை நோக்கி இனியும் சிந்திக்காதுவிட்டால் அவர்களுக்கு அரசியல் விமோசனம் இருக்கப் போவதில்லை.
தமிழ் அரசியல் தலைமைகளின் இயலாமை போதியளவு நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அவர்களை ஆதரிப்பவர்களாகவே இருக்கின்றனர். பாரம்பரிய கட்சி – பழக்கப்பட்ட கட்சி என்னும் அடிப்படையில் சிந்தித்தால் மக்கள் மத்தியிலிருந்து புதிய தலைமைகள் ஒருபோதும் உருவாகாது. தமிழ்த் தேசிய அரசியல் கிட்டத்தட்ட ஓய்வூதிய அல்லது முதியோர் இல்ல அரசியலாகவே இருக்கின்றது. புதிய காற்றை சுவாசிக்க முடியவில்லை. இந்தப்போக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. கதிரையைத் தொடர்ந்தும் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணும் அரசியல்வாதிகளாகவே பலரும் இருக்கின்றனர். இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னரும் உயர்நிலை இடம்கொடுக்காத போதிலும் கதிரை ஆசையிலிருந்து பலரால் விடுபட முடியவில்லை.
இவர்களை அசிங்க அரசியல்வாதிகள் என்றுதான் கூறவேண்டும். மக்கள் ஏன் தங்களைத் தொடர்ந்தும் நிராகரிக்கின்றனர் என்பதைக்கூட சிந்திக்க முடியாதவர்களாகவே பலரும் இருக்கின்றனர். இதன் காரணமாகவே தமிழ் இனம் தலைமையற்ற ஓர் இனமாக மாறியிருக்கின்றது. ஆனால் சிங்கள மக்களோ ஒரு தலைமை இல்லாமல்போகும் போது புதிய தலைமையை நோக்கி சிந்திக்கத் தயங்காதவர்களாளவே இருக்கின்றனர். அவர்கள் பாரம்பரியம் என்றுகொண்டு கிடக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியலில் உண்மையாக இருப்பது உண்மையாயின் வயது மூத்த தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல்களிலிருந்து விலகி புதியவர்களுக்கு இடமளிக்க முன்வர வேண்டும் – வருவார்களா?