இலங்கை தமிழ் அரசு கட்சியின் உத்தியோகபூர்வ முடிவை அதன் மத்திய குழு அறிவித்திருந்தது. ஆனால், கட்சியின் மாவட்டமட்ட உறுப்பினர்கள் பலர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றனரென அறிவித்ததுடன், தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தனர். ஆனால், கட்சியின் உத்தியோகபூர்வ முடிவை வெளிப்படையாக எதிர்க்காமலும் – அதேவேளை தங்களை தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாகவும் காண்பித்துக் கொண்டனர். இந்த நிலையில் தமிழ் அரசு கட்சியை தீர்மானிக்கும் நபரான எம். ஏ. சுமந்திரன் தமிழ் பொது வேட்பாளரை தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார். தோற்கடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே தனது செல்வாக்கைக் கொண்டு கட்சியை சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக மாற்றினார்.
இதனோடு உடன்பாடு இல்லை என்றவர்களும் வெளிப்படையாக தமிழ் தேசியப் பொதுக் கட்டமைப்பின் மேடைகளில் ஏறவில்லை. இந்தநிலையில் கட்சியின் முடிவுக்கு அமைவாக சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் சுமந்திரன் பேசியிருக்கின்றார். தமிழ் அரசுக் கட்சி சஜித்துடன்தான் என்பதை காண்பித்ததுடன், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகப் பிரசாரங்களையும் மேற்கொள்வோம் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். தமிழ் பொது வேட்பாளரை வெளிப்படையாக எதிர்க்கும் சுமந்திரன் – வெளிப்படையாக சஜித்தின் மேடையில் நிற்கின்றார். ஆனால், தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறும் சிறீதரனோ வெளிப்படையாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் மேடைகளில் இதுவரையில் தோன்றவில்லை.
தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறும் தமிழ் அரசு கட்சியினர் சுமந்திரனை கண்டு அஞ்சுகின்றனரா அல்லது தமிழ் அரசு கட்சியும் தமிழ்ப் பொதுவேட்பாளருடன் நிற்பதான தோற்றத்தை காண்பிப்பதற்காக நடிக்கின்றனரா? இதில் எது உண்மை? தமிழ் அரசுக் கட்சி ஒரு பெரிய கட்சி – பாரம்பரிய கட்சி – என்றெல்லாம் கூறிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் செயலாற்றுவதை நிறுத்த வேண்டும். ஒன்றில் பொது வேட்பாளரை ஆதரிப்பதாயின் வெளிப்படையாக அதற்கான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். வெறுமனே இணைய ஊடங்கங்களிலும் யூ-ரியூப்பிலும் பேசிவிட்டால், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அர்த்தமல்ல.
மாறாக, தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி மக்களை வாக்களிக்கத் தூண்டும் நோக்கில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். தங்களின் பாராளுமன்ற தேர்தலின்போது, எவ்வாறு வாக்குகளை திரட்ட பணியாற்றுவார்களோ அதே ஆர்வத்தோடும் – அர்ப்பணிப்போடும் உழைக்க வேண்டும். ஏனெனில், இது ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டிய விடயம். ஆனால், அந்தத் தேரை இழுப்பதை நாங்கள் குழப்பியே ஆவோம் என்பதுதான் சுமந்திரனின் நிலைப்பாடு. சுமந்திரனின் நிலைப்பாடு எதுவோ அதுதான் தற்போது தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. அப்படியில்லை என்றால் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பாகக் கூறும் தமிழ் அரசு கட்சியினர் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டும் – இல்லாவிட்டால் சுமந்திரனிடம் தோல்வியடைய வேண்டும். அவ்வாறில்லாது தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படக்கூடாது. சொந்த மக்களுக்கு உண்மையாக இருப்பதற்கான பொறுப்பை தமிழ் அரசு கட்சி வெளிப்படுத்தவேண்டும்.