அண்மையில் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீள நடத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டதுடன் பரீட்சையை மீள நடத்துவது குறித்து ஆராய கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்தாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சையை மீள நடத்துவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனவும், சமூக ஊடகங்களில் வெளியான மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.