ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படுமோசமான அழிவை சந்தித்தது – இறுதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் இழந்துபோனது. மகாவலியாற்றில் தினமும் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் தலைவர் (ருகுணு) றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்டார். அவர் அரை உயிரில் இருக்கும் போதே எரியூட்டப்பட்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜே.வி.பியின் உறுப்பினர்களை அழித்தொழித்த விடயத்தில் உள்ளுக்குள்ளும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவல்லை. ஆனால் தங்களுக்கான நீதியென்பது அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் என்னும் உறுதியுடன் தங்களை புதுப்பித்துக் கொண்டு, ஜனநாயகத்தை அத்திபாரமாகக் கொண்டு, தங்களை ஓர் அரசியல் ஸ்தாபனமாக கட்டியெழுப்பினர்.
இந்தக் காலத்தில் அவர்களை அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய ஓரு தரப்பாக எவருமே கருதியதேயில்லை – ஆனால், அவர்கள் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் பயணித்தனர். அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான, ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் உச்சபட்சமாகப் பயன்படுத்திக் கொண்டு உழைத்தனர். அவர்களின் கடின உழைப்பு அவர்களை கொழும்பின் அதிகாரத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.
எந்த அரச படைகள் அவர்களை நிர்மூலமாக்கியதோ, அந்தப் படைகளின் தலைமைத் தளபதியாக ஜே.வி.பியே இருக்கும் அரசியல் சூழல் உருவாகியிருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தை நம்பியபோதிலும், தோல்வி தந்த படிப்பினைகளிலிருந்து கற்றுக்கொண்டனர் – ஆயுதங்களின் மூலம், தாங்கள் விரும்பும் அதிகாரத்தை, ஒரு போதுமே கைப்பற்ற முடியாதென்பதை புரிந்து கொண்டு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிய அதே வேளை, தங்களின் அடிப்படையான கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காமல் ஓர் அதிகாரத் தரப்பாக எழுச்சியுற்றிருக்கின்றனர்.
மார்க்சியம் தொடர்பில் பேசிய போதும் கூட, தற்போது யதார்த்தவாதத்திற்கே முன்னுரிமையளிக்கும் ஓர் அரசியல் ஸ்தாபனமாக தங்களை மாற்றியிருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் அவர்களது தியாகங்கள் வீண் போகவில்லை.
ஜே.வி.பி. அதன் இலக்கில் வெற்றிபெற்றுவிட்டது. நமது சூழலை உற்று நோக்கினால் என்ன தெரிகின்றது? ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றப் புறப்பட்டு, 1990களில் ஜனநாயக நீரோட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் (டி.பி.எல்.எப்.) ஆகிய அரசியல் கட்சிகளின் வளர்ச்சி என்ன?
வடக்கு, கிழக்கில் இவர்களுக்கு இருக்கின்ற அரசியல் கட்டமைப்பு என்ன? மக்கள் ஆதரவு என்ன? ஏதாவது இருக்கின்றதா? இலங்கை தமிழ் அரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டதன் மூலம், பெற்றுக் கொண்ட வெற்றியை, தனிக் கட்சியாக – ஆகக் குறைந்தது ஒரு கூட்டாக கூட தக்கவைக்க முடியாத கையறுநிலைக் கட்சிகளாகவே இருக்கின்றனர்.
மறுபுறம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்று, பதினைந்து வருடங்களாகின்றது. கடந்த பதினைந்து வருடங்களில் அந்த அமைப்பில் எஞ்சியவர்களால் புதிய சூழலுக்கான அரசியல் ஸ்தாபனமொன்றை கட்டி யெழுப்ப முடிந்ததா? புலிகள் அமைப்பிலிருந்து, ஆகக் குறைந்தது, சில முன்னேற்றகரமான சிந்தனையாளர்கள் கூட வெளித்தெரியவில்லையே – ஏன்? இத்தனை புலம்பெயர் அமைப்புகள் என்ன செய்திருக்கின்றன? ஏன் முடியவில்லை.
ஜனநாயக போராளிகள் என்னும் பதாகைகளையெல்லாம், தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதைத்தானே, கடந்த பொதுத் தேர்தல் நிரூபித்திருக்கின்றது. றோகண விஜயவீரவும் கொல்லப்பட்டார் – ஜயோ – தலைவர் போய்விட் டாரே என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கவில்லையே அந்த அமைப்பு – அதே வேளை பழிவாங்கும் அரசியலையும் செய்ய முயற்சிக்கவில்லை – ஏனெனில் ஓர் அரச இயந்திரத்தை பழிவாங்க முடியாது – அதற்குப் பதிலாக அதனையே கைப்பற்றும் உத்திகள் பற்றியே ஜே.வி.பி சிந்தித்தது. சாதித்தது.
எனவே தியாகங்களுக்கான பெறுமதி என்பது, வருடம் தோறும் விளக்கேற்றுவதுடனும், சில மரக்கன்றுகளை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெற்றோருக்கு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை. நம்மவர்களது தியாயங்களுக்கான பெறுமதி என்பது, புதிய சூழ்நிலைகளுக்கான செயலிலேயே தங்கியிருக்கின்றது.