தேசிய மக்கள் சக்தியினர் வன்முறையை கையில் எடுத்துள்ளதான போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ:-
நாட்டு மக்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளனர். ஆட்சியாளர்களே அச்சத்தில் உள்ளனர்.ஆகவே ஏனைய அனைத்து கட்சிகளும் தேசிய மக்கள் சக்தியினரை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் விடயத்தை மேற்கொள்ள எத்தனிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தியினர் தமக்கு வாக்களிக்காதவர்களை அச்சுறுத்தும் வகையான விடயத்தை மேற்கொள்வதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறு தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யமாறு கேட்டுக்கொள்கின்றோம் .அதேபோன்று நாமும் முறைப்பாட்டை பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து அச்சுறுத்தும் வகையிலான மற்றும் வன்முறையான விடயங்களில் எவரும் ஈடுபட்டால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். எமக்கு எதிரான தரப்பினரே இவ்வாறு பொய்யான விடயங்களை மேற்கொண்டு தேசிய மக்கள் சக்திக்கு தவறான பெயரை உருவாக்க எத்தனிக்கின்றனர் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.