31 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நயினாதீவை முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை- பி.எஸ்.எம் சார்ள்ஸ்

உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், யாழ். நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் வரை வசிக்கின்றனர்.

மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நயினாதீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக கடற்தொழில் காணப்படுகிறது.

நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடலின்போது கிராம மக்களால் எடுத்துக் கூறப்பட்டது.

இதன்போது பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்டவரைபை சமர்ப்பிக்குமாறும், நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.

தீவக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர் நயினாதீவு அமுதசுரபி
அன்னதான மண்டப நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவிலும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் கலத்துகொண்டனர்.

இதேவேளை தீவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று மதத்தலைவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார்.

இதேவேளை ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிப்புரைகளை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் நயினாதீவு மக்களிடம் உறுதியளித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles