நாடு என்ற ஒன்று மீதமிருந்தால் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளால் அரசியலைக்கூட செய்ய முடியும். கட்சிகள், குழுக்களாக பிரிந்து நின்று செயற்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது அவசியமாகும் என்று, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுவந்த பிரதான பிரச்சினையான எரிபொருள் பிரச்சினைக்கு தற்போது தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
அதேபோன்று எரிவாயு பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்காக கட்சி என்ற முறையில் ஜனாதிபதியுடன் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்ளை விளக்கவுரையில், ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
225 உறுப்பினர்களில் 134 உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களித்தனர். வாக்களிக்காத தரப்பினருக்குக்கூட ஜனாதிபதி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார்.
உண்மையில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று பாராது ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கான சூழலே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது.
குழுக்களாகவும் கட்சிகளாகவும் மத ரீதியிலும் பிரிந்து இருந்த காலம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
எனவே நாம் ஒன்றாக இருந்து பணியாற்ற வேண்டியது அவசியாகும்.
நாடு என்ற ஒன்று மீதமிருந்தால் மட்டுமே எம்மால் அரசியலைக்கூட செய்ய முடியும். எனவே நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.
நாட்டு மக்கள் என்ற முறையில், இந்த நாட்டில் வாழும் அனைவரும் அன்றாட வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் முன்னிற்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
அதேபோன்று கட்சி என்ற முறையில் முன்னிற்க வேண்டும்.
சில கட்சிகள் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர். அவர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஒருவிதமாகவும் வெளியில் வந்ததன் பின்னர் ஒருவிதமாகவும் பேசுகின்றனர்.