நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளி கிராமத்தில் உள்ள புறண்டி வெளி குளக்கட்டுக்கு அருகாமையில் உள்ள மேட்டு நிலப்பகுதி விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்ட போது புராதன பொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.கிறிஸ்கந்த குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட பொருட்கள் கிறிஸ்துவிற்கு முற்பட்ட புராதனப் பொருட்கள் என அப்பகுதி மக்கள் தெரிவுத்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 2 கத்தி வடிவிலான வெட்டும் உபகரணத்தையும், உயிர்ச் சுவடி கவாட்டி கடல் வாழ் உயிரினம் சிற்பி வடிவிலானது மற்றும் இரும்பிலிருத்து எடுக்கப்படும் களிவு இரும்பு துண்டு உட்பட ஓட்டுத்துண்டுகள் மட்பாண்டப் பொருட்கள் என்பன காணப்பட்டள்ளதையடுத்து பிரதானமாகக் காணப்பட்ட நான்கு பொருட்களையும் மீட்டு குறித்த தினத்தில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எம். சிறிஸ்கந்தகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த பொருட்கள் தொடர்பாக மன்னார் தொல்பொருள் திணைக்களத்திற்கு பிரதேசச் செயலாளரினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த தினைக்களத்தினர் திங்கட்கிழமை மாலை நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் குறித்த பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன் அதை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மற்றும் குறித்த பொருட்கள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதே வேளை நானாட்டான் பிரதேச பகுதியில் கடந்த மாதம் பண்டைய கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.