மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது அண்டர்சன் – டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 358 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து துணிச்சலான பதில் அளித்துள்ளது.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 225ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்து 133 ஓட்டங்களால் இந்தியாவை விட பின்னிலையில் இருந்தது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர்களான ஸக் க்ரோவ்லி, பென் டக்கெட் ஆகிய இருவரும் சதங்களை நெருங்கிக்கொண்டிருக்கையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தனர்.
அவர்கள் இருவரும் 166 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஸக் க்ரோவ்லி 13 பவுண்டறிகள் ஒரு சிக்ஸுடன் 84 ஓட்டங்களையும் பென் டக்கெட் 13 பவுண்டறிகளுடன் 94 ஓட்டங்களையும் பெற்று 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
ஆட்ட நேர முடிவில் ஒல்லி போப் 20 ஓட்டங்களுடனும் ஜோ ரூட் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
பந்துவீச்சில் பென் டக்கெட்டை ஆட்டம் இழக்கச் செய்த அறிமுக வீரர் அன்ஷுல் கம்போஜ் தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார். மற்றைய விக்கெட்டை ரவிந்த்ர ஜடேஜா வீழ்த்தினார்.
முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்த சற்று நேரத்தில் ரவிந்த்ர ஜடேஜா மேலதிகமாக ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் ஷர்துல் தாகூர், வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷர்துல் தாகூர் 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.