நுவரெலியா ஹட்டன் டிப்போவின் புத்தாண்டு வருமானம் ஒரு கோடியைத் தாண்டியது!

0
144

இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவின் சித்திரை புத்தாண்டு வருமானம் ஒரு கோடியை தாண்டியுள்ளதாக நுவரெலியா ஹட்டன் டிப்போவின் சிரேஷ்ட பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு புற நகரங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திலுள்ள தமது வீடுகளுக்குத் திரும்பியவர்கள், மீண்டும் வீடு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சித்திரை புத்தாண்டுக்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹட்டனை நோக்கிச் சென்றிருந்த நிலையிலேயே, இவ்வாறு அதிகரித்த வருமானம் பதிவாகியதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினமும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் தொழிலுக்காக கொழும்பு நோக்கி செல்வதற்கு ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தினை நோக்கிச் சென்றிருந்த நிலையில், அவர்கள் சிரமமின்றி செல்வதற்கு சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும் தொலைபேசி அழைப்பின் ஊடாக அழைத்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக உடனுக்குடன் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஹட்டன் டிப்போவுக்கு போதுமான ஊழியர்களை தந்தால் தாங்கள் இதைவிட பாரிய சேவையினை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இன்றைய தினம் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொழும்பு நோக்கி செல்வதற்காக பல மணிநேரங்கள் ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.