பங்களாதேஷில் படுகொலைகளுக்கு யூனுஸ்தான் காரணம் – ஷேக் ஹசீனா

0
18

பங்களாதேஷில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு கிளர்ச்சிக்கும் படுகொலைகளுக்கும் மூளையாக செயல்பட்டவர் முகம்மது யூனுஸ் தான் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக ஷேக் ஹசீனா உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. பல இடங்களில் மாணவர்களுக்கும், ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த வன்முறை போராட்டங்களில் மாணவர்கள், பொலிஸார், அப்பாவி பொதுமக்கள் என ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பிரதமரின் இல்லத்தை போராட்டக்குழுவினர் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் உருவானது.

இவ்வாறு அசாதாரண சூழல் நிலவியதையடுத்து, கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். பங்களாதேஷில் அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்ததையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

இடைக்கால அரசு பொறுப்பேற்றபிறகு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

அண்மையில் இந்து அமைப்பின் தலைவரும், இஸ்கான் முன்னாள் துறவியுமான சின்மய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், நியூயோர்க்கில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக ஷேக் ஹசீனா உரையாற்றினார். அப்போது, பங்களாதேஷில் இந்துக் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மத அமைப்பான இஸ்கான் மீதான தொடர் தாக்குதல்களுக்காக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை கடுமையாக சாடினார்.

அத்தோடு, பங்களாதேஷில் நடந்த படுகொலைகளுக்காக என் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உண்மையில், முகமது யூனுஸ்தான் மாணவர் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்தியுள்ளார்.

அவர்தான் மூளையாக இருந்தார். பங்களாதேஷில் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்தால், அரசாங்கம் நீடிக்காது என்று லண்டனைச் சேர்ந்த தாரிக் ரஹ்மான் (பி. என். பி. தலைவர் மற்றும் கலிதா ஜியாவின் மகன்) கூட கூறியுள்ளார்.

இன்று ஆசிரியர்கள், பொலிஸார் என அனைவரும் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். தேவாலயங்கள் மற்றும் பல கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவது ஏன்?

நான் படுகொலையை விரும்பவில்லை. நான் ஆட்சியைப் பிடிக்க நினைத்திருந்தால் படுகொலை நடந்திருக்கும். மக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்படும்போது, நான் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அன்று எனது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால், கானா பவனில் (பிரதமர் இல்லம்) பலர் இறந்திருப்பார்கள். அதை நான் விரும்பவில்லை. அதனால் நாட்டைவிட்டு வெளியேறினேன்- என்றார்.