பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை முதல் வெற்றி

0
196

தீபக் சாகரின் அபாரமான பந்துவீச்சால் 106 ஓட்டங்களுக்குள் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தி, 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது சென்னை சுப்பர் கிங்ஸ். இதன் மூலம், சென்னை அணி இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த 8ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் சென்னை அணியின் தலைவர் டோனி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.

துடுப்பாட்டத்துக்கு சாதகமான வான்கடே மைதானத்தில், தனது முதல் போட்டியில் 221 ஓட்டங்களை குவித்திருந்தது பஞ்சாப் அணி. இதனால், நேற்றைய போட்டியிலும் அதிக ஓட்டங்களை குவிக்கும் நோக்கில் களமிறங்கியது அந்த அணி.

ஆனால், அவர்களின் இலக்கை அடைய விடவில்லை சாகர். சாகரின் பந்தில் ஓட்டம் எதனையும் எடுக்காமலே மயங்க் அகர்வால் போல்ட் ஆனார்.

அடுத்து, அணித் தலைவர் கே.எல். ராகுல் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார். கெய்ல் 10, தீபக் ஹூடோ 10, நிக்கோல்ஸ் பூரன் 0 என்று சாகரின் பந்துவீச்சில் வீழந்தனர். இதனால், 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஆனால், ஆறாவது விக்கெட்டுக்காக இணைந்த சாருக் கான் நிதானமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் றிச்சர்ட்சன் துணையாக நின்று ஆடினார். இந்த இணை 27 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று ஆறுதல் கொடுத்தது. ஆனால், றிச்சர்ட்சன் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மீண்டும் பஞ்சாப் அணி தடுமாறியது.

ஆனாலும், சாருக் கான் 4 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்கள் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது பஞ்சாப் அணி.

சென்னையின் பந்துவீச்சில், தீபக் சாகர் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

இலகுவான இலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, ராஜ்புத் கெய்க்வாட், டூ பிளசிஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்னர். கெய்க் வாட் 5 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

டூ பிளசிஸ் பொறுமையாக ஆடினார். ஆனால், அவருடன் அடுத்து இணைந்த மொயின் அலி அதிரடி காட்டினார். அவர் 7 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 46 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 8, அம்பதி ராயுடு 0 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

எனினும், 15.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

டூ பிளசிஸ் 36 ஓட்டங்களையும், சாம் கரன் 5 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

பஞ்சாப்பின் பந்துவீச்சில் முஹமட் சமி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக தீபக் சாகர் தெரிவானார்.