பப்புவா நியூ கினியாவில், மண்சரிவு : 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மண்ணுக்குள் புதைவு

0
56

பப்புவா நியூ கினியாவில், மண்சரிவினால், சுமார் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், மண்ணுக்குள் புதைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில், மலைப் பகுதியில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டது.

அந்த நேரத்தில், மக்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததினால், உயிரிழப்பு அதிகமாகியுள்ளது.குறைந்தது, 6 கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
3 கிராமங்கள், மண்சரிவுகளால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள், மண்ணுக்குள் மூடப்பட்டுள்ளன.
இந்த மண்சரிவில் சிக்கி, சுமார் 670 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பப்புவா நியூ கினியவில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய மண்சரிவினால், 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர், உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக, அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவில், கட்டடங்கள், விவசாய நிலங்கள் அழிந்ததுடன், வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக, அரசு குறிப்பிட்டுள்ளது.மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வந்ததாகவும், 150- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மீட்பு படையின் வருகை தாமதமாவதால், உள்ளுர் மக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டி வருகின்றனர்.வீடுகள் 8 மீட்டர் ஆழத்தில் புதைந்துள்ளதால், எங்கு மக்கள் புதைந்திருக்கிறார்கள் என தெரியாமல், மக்கள் அனைத்து இடங்களிலும் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.இதனால், கூடுதலாக மீட்பு படையினர் தேவைப்படுவதாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.