பரபரப்பை தோற்றுவித்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரை இறுதிப் பந்தில் வென்றது லக்னோ

0
92

பெங்களூரு சின்னசுவாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (10) இரவு கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் கிரக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டினால் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணி வெற்றி கொண்டது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட இலக்கை அடைந்து வெற்றியீட்டியது.

இதன் மூலம் இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மிகப் பெரிய வெற்றி இலக்கை விரட்டிப்பிடித்த அணி என்ற பெருமையை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் தனதாக்கிக்கொண்டது.

மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், நிக்கலஸ் பூரண் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களே லக்னோவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது 4 ஓவர்கள் நிறைவில் கய்ல் மேயர்ஸ் (0), தீப்பக் ஹூடா (9), க்ருணல் பாண்டியா (0) ஆகிய மூவரின் விக்கெட்களை இழந்து 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

தொடர்ந்து அணித் தலைவர் கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 4ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 30 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களை விளாசினார்.

இந்த இணைப்பாட்டத்தில் ராகுலின் பங்களிப்பு வெறும் 10 ஓட்டங்களாகும். அவர் 18 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது 5ஆவதாக ஆட்டம் இழந்தார்.l

அதன் பின்னர் நிக்கலஸ் பூரண், அயூஸ் படோனி ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 35 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

19 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட பூரண் 7 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளுடன் 62 ஓட்டங்களைக் குவித்தார். இதனிடையே 15 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிவேக அரைச் சதத்தைப் பதிவுசெய்தார்.

அயூஷ் படோனி 30 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டம் இழந்ந்தார்.

கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு மேலும் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஹர்ஷால் பட்டேலின் முதல் பந்தில் உனத்கட் ஒரு ஓட்டத்தைப் பெற அடுத்த பந்தில் மார்க் வூட் (0) களம் விட்டகன்றார்.

அடுத்து   களம் நுழைந்த ரவி பிஷோனி அடுத்த 2 பந்துகளில் 3 ஓட்டங்களைப் பெற ஆட்டம் சமநிலை அடைந்தது. எனினும் 5ஆவது பந்தில் உனந்கட் (9) தனது விக்கெட்டைப் பறிகொடுக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன் போட்டி முடிவு சுப்பர் ஓவரில் தீர்மானிக்கப்படுமோ என்ற ஒரு நிலை தோன்றியது.

கடைசிப் பந்தில் பந்துவீச்சு எல்லையில் 10ஆம் இலக்க வீரர் ரவி பிஷ்னோயை ‘மான்காட்’ முறையில் ரன் அவுட் செய்ய ஹர்ஷால் பட்டேல் முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி தவறியது. அதனைத் தொடர்ந்து பந்தை விக்கெட்டை நோக்கி எறிந்தபோதிலும் அது விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கவில்லை.

தொடர்ந்து கடைசிப் பந்தை பட்டேல் வீசிய போது உதிரி மூலம் ஒரு ஓட்டம் கிடைக்க  லக்னோ  சுப்பர் ஜயன்ட்ஸ் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வெய்ன் பார்னல் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது.

விராத் கோஹ்லி, அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய மூவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களை விளாசினர்.

கோஹ்லி, டு ப்ளெசிஸ் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 96 ஓட்டங்களையும் டு ப்ளெசிஸ், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 115 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

கோஹ்லி 61 ஓட்டங்களையும் டு ப்ளெசிஸ் ஆட்டம் இழக்காமல் 79 ஓட்டங்களையும் க்ளென் மெக்ஸ்வெல் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.