பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு நாள்தோறும் 2000 ரூபா, வழங்க தீர்மானம்

0
110

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் மதிப்பீட்டாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் ரூபா கொடுப்பனவாக செலுத்துவதற்கும் போக்குவரத்து கொடுப்பனவாக 2 ஆயிரத்தி 900 ரூபா செலுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் மதிப்பீட்டாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக செலுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 

அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ள கொள்கையளவிலான தீர்மானத்தின் பிரகாரம் திறைசேரி மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, தங்களது வீடு அல்லது வழக்கமான பணியிடத்தில் இருந்து பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு மத்திய நிலையத்துக்கு இருக்கும் தூரத்திற்கு அமைய குறைந்த தூரம் இருக்கும்  இடத்தில் இருந்து விடைத்தாள் மதிப்பீட்டு மத்திய நிலையத்துக்கு நாள்தோறும் 80 கிலோ மீட்டருக்கு அதிக தூரம் பயணிக்கும் மதிப்பீட்டாளர்களுக்கு மற்றும் மதிப்பீட்டு மத்திய நிலையத்துக்கு அருகில் தங்கும் வசதி இல்லாத மதிப்பீட்டாளர்களுக்கு நாள்தோறும் 2ஆயிரத்தி 900ரூபா கொடுப்பனவு செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதன் பிரகாரம் 2022 (2023) கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக நிகழ்நிலை வழி ஊடாக மதிப்பீட்டாளர்களை இணைத்துக்கொள்ளும் விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளும் காலம் இந்த மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்றார்.