பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் பள்ளி ஆசிரியரான சாமுவேல் பதி பாடம் நடத்தி கொண்டிருந்தபொழுது முகமது நபியின் கார்ட்டூன்களை காண்பித்த சர்ச்சையில் 18 வயது இளைஞர் ஒருவரால் கொடூர முறையில் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் பாரீஸ் நகரில் சார்போன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் லெஜன் டி ஹானர் என்ற பிரான்சின் உயரிய விருது பதிக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
பிரான்சில் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அந்நாட்டு அதிபர் மேக்ரான் இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு எதிராக போரிடுவேன் என உறுதி எடுத்து கொண்டார்.
எனினும், இஸ்லாமுடனும், முஸ்லிம்களுடனும் மேக்ரானுக்கு என்ன பிரச்னை? என்று துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 183 பேரது விசாக்களை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர். அவர்களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்ற உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது {ஜா பாஷாவின் சகோதரியின் பெயரும் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரான்சில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், 183 பேரும் உரிய ஆவணங்களுடன் இருந்தும் வலுகட்டாயத்தின்பேரில் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் பிரெஞ்சு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாஷாவின் சகோதரியை நாட்டில் அனுமதிக்கும்படி தூதரகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. அவரது மாமியாரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை காண்பதற்காக பாஷாவின் சகோதரி விருப்பம் தெரிவித்து உள்ளார். அதனால் அவரை தற்காலிகம் பிரான்சில் தங்க அனுமதி தரும்படி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.