கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர். இயந்திரமொன்றை நாட்டுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கத்திடம் 80 இலட்சம் ரூபா இல்லை. ஆனால், மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் 5 கோடி ரூபா பெறுமதியான காரிலே பயணிக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்தவர்களும் அதனை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறுதான் தேசப்பற்றுள்ள தலைவர்களின் செயல்பாடுகள் உள்ளன.
வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக ஆயுர்வேத மூலிகையைக் கண்டு பிடித்துள்ளதாகவும், அதனைப் பயன்படுத்தினால் சிறந்த பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டு, அந்த மூலிகையை இலவசமாக வழங்குவதாக ஒருவர் கூறிவருகின்றார்.
இவர் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 80 மில்லியன் ரூபா பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இவரது மருந்துகள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை.
அவருக்கு எவ்வாறு ஜனாதிபதி அனுமதி வழங்கினார். இதேவேளை, அவர் தொடர்பில் மருத்துவ சங்கத்தினர் அமைதி காத்து வருவதற்கான காரணம் என்ன? மரணம் கண்ணுக்குத் தெரியும் தருணத்திலும் அரசாங்கம் இவ்வாறு பொறுப்பற்று செயல்படுவது நாட்டில் மேலும் பாதிப்புக்களை அதிகரிக்கும். இவ்வாறான நிலைமையில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளார் என்பதை நாங்கள் மாத்திரமல்ல அவரது வெற்றிக்காக உழைத்த அனைவருமே தெரிவித்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.