புதிய அரசமைப்பில், மலையக மக்களுக்கான விடயதானங்களையும் உள்வாங்குவதற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
“பேராதனைப் பல்கலைகழக பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான எஸ்.விஜயசந்திரன் தலைமையிலேயே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது” என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிய அரசமைப்பில், மலையக மக்கள் சாந்த விடங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதற்கான முன்மொழிவுகளை, மலையக சமூக அமைப்புகள், கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற அமைப்புகள், மலையகப் புத்தி ஜீவிகளுடன் கலந்துரையாடி இறுதிவரைபைத் தயாரித்து அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு இந்தக் குழு முன்னின்றுச் செயற்படும் என்றார்.
அரசமைப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்களை, கட்சி ரீதியாகவோ, தொழிற்சங்க ரீதியாகவே முன்வைக்க முடியாது என்றும் இது மக்களின் உரிமைசார்ந்த விடயம் என்பதால், மலையகத்தின புத்திஜீவிகளின் அபிப்பிராயங்கள் ஆலோசனைகள் முக்கியமானதாகும் என்றார்.