பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.55 இற்கு ஆரம்பமானது. 9.55 க்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்;டது. முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
அந்தவகையில் புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார்.
அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புதிய சபாநயகருக்கு, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவரது பெயரை முன்மொழிந்தார். அதை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகர பிரதிக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை முன்மொழிந்தார்.
இதேவேளை, ஆளும் கட்சியின் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நலிந்த ஜயதிஸ்ஸவும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
10 ஆவது நாடாளுமன்றத்தின்; கன்னி அமர்வில் ஜனாதிபதி இன்று தமது கொள்கைப் பிரகடன உரையை சமர்ப்பித்தார்.
அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதி காலை 9.30 வரை ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.