தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை, குடும்ப உறுப்பினர்களே கொலை செய்யும் குற்றங்களுக்கான, தண்டனைகளை கடுமையாக்கி இருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மேலே சொன்ன குற்றத்துக்கு, ஐக்கிய அரபு அமீரக நீதிபதிகள் மென்மையான தண்டனை வழங்கலாம் எனச் சொல்லப்பட்டு, ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டத்தை, திரும்பப் பெற இருப்பதாக ஐக்கிய அரபு அமீரக அரசு சொல்லி இருக்கிறது.
பெண்களை கௌரவக் கொலை செய்வது, இனி கொலை குற்றமாகக் கருதப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.
ஒவ்வோர் ஆண்டும், உலகில் ஆயிரக் கணக்கான பெண்கள், தங்கள் குடும்பத்துக்கு களங்கம் விளைவித்துவிட்டதாகக் கருதி, கொல்லப்படுகிறார்கள் என்கின்றன மனித உரிமைக் குழுக்கள்.
இப்படி பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு, திருமணம் செய்து கொண்டவரைத் தாண்டி, மற்றவர்களுடம் பாலுறவு வைத்துக் கொள்வது அல்லது மற்றவர்களுடன் பாலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம்சாட்டப்படுவதைக் காரணமாகச் சொல்கிறார்கள். இதை அங்கு கௌரவக் கொலை என்கிறார்கள்.
இந்த மரணங்களை தவறான முறையில் விவரிக்கிறார்கள் என்று சொல்பவர்கள், இந்த கௌரவக் கொலை எனக் கூறுவதை விமர்சிக்கிறார்கள்.
இப்படி பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக, கடுமையான தண்டனைகளை வழங்குவது, பெண்கள் உரிமையை பாதுகாக்க, ஐக்கிய அரசு அமீரகம் எத்தனை உறுதியாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது என வேம் செய்தி முகமை சொல்லி இருக்கிறது.
இந்த வளைகுடா நாட்டின் சட்ட திருத்தம், அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானால் அனுமதிக்கப்பட்ட சீர்திருத்தங்களில் ஒன்று என்கிறது வேம் செய்தி முகமை.
அதிபர் அனுமதி கொடுத்து இருக்கும் சீர்திருத்தங்களில், ஒரு சீர்திருத்தம், வெளிநாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறி வாழும் வெளிநாட்டவருக்கு, தான் விரும்பும் பரம்பரை மற்றும் உயில் சம்பந்தப்பட்ட சட்டங்களைத் தேர்வு செய்யும் உரிமையை வழங்கும்.
இந்த சட்டம், ஐக்கிய அரபு அமீரகத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஒரு நிதி நிலைத்தன்மையை அடைய உதவும் என்கிறது வேம் செய்தி முகமை.
மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத செயல்களை, ஐக்கிய அரபு அமீரக அரசு, கிரிமினல் குற்றமாக கருதப்படாதவாறு மாற்றும் எனவும் சொல்லி இருக்கிறது வேம். இது குறித்து மேலதிக தகவல்களைக் கொடுக்கவில்லை.
மேலே குறிப்படப்பட்டுள்ள மாற்றங்கள், ஐக்கிய அரபு அமீரக சமூகத்தில், சகிப்புத்தன்மை என்கிற கொள்கையை நிறுவும்.
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களை, இரு தரப்பினர் இடையிலும் மத்தியஸ்தம் செய்து கையெழுத்திட வைத்தது அமெரிக்கா. அதன் பின்பே இந்த அறிவிப்பு வெளியானது.