பென்குயின்கள் சீல்கள் மாத்திரம் வசிக்கும் இரண்டு தீவுகளிற்கும் வரிவிதித்தார் டிரம்ப்!

0
29

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் வரிகள் விதிக்கப்பட்ட நாடுகளில் பென்குயின்கள் மற்றும் சீல்கள் மாத்திரம் காணப்படும் அன்டார்டிக்கின்  தீவுகளும் இடம்பெற்றுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது

பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது

அவுஸ்திரேலியாவின் தென்மேற்கே 4000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹேர்ட் மற்றும் மக்டொனால்ட் தீவுகளே இவை.

பேர்த்திலிருந்து படகு மூலம் மாத்திரம் இங்கு செல்ல முடியும் –  ஏழு நாள் பயணம்,இதனை விட முக்கியமாக கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக மனிதர்கள் அங்கு சென்றதில்லை.

அமெரிக்க பொருட்கள் மீதான நியாயமற்ற வரிகளிற்கு பதிலடியாக புதிய வரி திட்டத்தை அறிவிப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் புதிய வரியை  அவுஸ்திரேலியாவின் வேறு சில பிரதேசங்களும் எதிர்கொண்டுள்ளன, ,அவற்றை தவிர நோர்வேயின் தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட்,போக்லான்ட் தீவுகள் ,பிரிட்டிஸ் இந்திய பெருங்கடல் பிரதேசம் ஆகியனவும் இந்த வரி பட்டியலில் உள்ளன.

இது உலகின் எந்த பகுதியும் டிரம்பின் வரிகளில் இருந்து தப்பமுடியாது – பாதுகாப்பானதல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர்  அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளை போல ஹேர்ட் அன்ட் மக்டொனால்ட் தீவுகள் மற்றும் கொக்கோஸ் தீவுகள் கிறிஸ்மஸ்தீவுகள் ஆகியன டிரம்பின் பத்து வீத வரியை எதிர்கொள்கின்றன.

ஹேர்ட் தீவு முற்றிலும் பனிக்கட்டிகள் நிறைந்த மக்கள் வசிக்காத பகுதியாகும்,அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிமலையான பிக்பென் இங்கேயே காணப்படுகின்றது.\

இந்த தீவு பெருமளவிற்கு பனிப்பாறைகளால் மூடப்பட்டதாக காணப்படுகின்றது.

இறுதியாக 2016ம் ஆண்டிலேயே மனிதர்கள் இந்த தீவிற்கு சென்றனர் – அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவுடன் அங்கு சென்ற வானொலி ஆர்வலர்கள் குழு, அங்கிருந்து ஒலிபரப்பொன்றில் ஈடுபட்டது.

தாஸ்மேனியா பல்கலைகழகத்தை சேர்ந்த மைக் கொபின் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக இந்த தீவை சுற்றியுள்ள நீர்நிலைகளிற்கு ஏழுமுறை சென்றுவந்துள்ளார்.

அந்த தீவிலிருந்து அமெரிக்காவிற்கு முக்கிய ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்,அங்கு எதுவும் இல்லை என அவர் பிபிசிக்கு தெரிவித்தார்.