பென்ஸ் – வெஸ்லி மோதும் 3ஆவது வருடாந்த கார்ட்மன் கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்

0
116

இலங்கையில் மிகவும் பழைமை வாய்ந்த கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்த பாடசாலைகளான முறையே புனித பெனடிக்ற் கல்லூரிகும் வெஸ்லி கல்லூரிக்கும் இடையிலான 3ஆவது வருடாந்த கார்ட்மன் கிண்ணத்துக்கான இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அருட்சகோதரர் லூக் கேடயத்துக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும்.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு பாடசாலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்ற போதிலும் புனித பெனடிக்ற் – வெஸ்லி அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டு கல்லூரிகளினதும் விளையாட்டுத்துறை வரலாற்றையும் சகோதரத்துவத்தின் பகிரப்பட்ட பிணைப்புகளையும் பிரதிபலிப்பதாக அமைகின்றது.

இந்த கிரிக்கெட் போட்டி விண்ணுலகில் நிச்சயிக்கப்பட்டதாகவும் அதில் மாபெரும் கிரிக்கெட் போட்டி என்ற பெயருக்கு இடம்  இல்லை எனவும் இரண்டு கல்லூரிகளினதும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

பொதுவாக மாபெரும் கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் கூத்தாட்டம், கொண்டாட்டம், வாகனங்களின் அணிவகுப்பு என பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் சம்பவங்கள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

ஆனால், இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கல்லூரிகளான  புனித பெனடிக்ற், வெஸ்லி ஆகியவற்றுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி சகோதரத்துவம், நட்புறவு, சிறந்த புரிந்துணர்வு போன்ற நற்பண்புகளை பிரதிபலிக்கும் போட்டியாக அமைவது சிறப்பம்சம் ஆகும்.

இந்த இரண்டு கல்லூரிகளும் 1896இல் முதல் தடவையாக கிரிக்கெட் அரங்கில் சந்தித்துக்கொண்டன. எனவே 127 வருட பாரம்பரிய உறவுகளை நினைவுகூறும் வகையில் இந்த வருட போட்டி அமையவுள்ளது.

2021இலும் 2022இலும் விளையாடப்பட்ட இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 2 நாள் போட்டியில் எந்த அணியும் முழுமையான வெற்றியை பெறவில்லை.

இதேவேளை, கொவிட் – 19 காரணமாக 2021இல் கைவிடப்பட்ட ஒருநாள் போட்டி கடந்த வருடம் நடைபெற்றபோது புனித பெனடிக்ற் வெற்றிபெற்று அருட்சகோதரர் லூக் கேடயத்தை சுவீகரித்தது.