மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகமுள்ள பிரதேசங்களை இனங்கண்டு, அந்த பிரதேசங்களுக்கான போக்குவரத்தை வரையறுக்க முறையான வேலைத்திட்டம் ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னரே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் செயல்படுவதால் கொரோனா வைரஸ் தொற்று நாடுபூராகவும் பரவும் அபாயம் உள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தவை வருமாறு:
மேல் மாகாணத்தில் இரண்டு வாரங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. மேல் மாகாணத்தை முற்றாக முடக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு அல்ல. என்றாலும், கொரோனா தொற்று எச்சரிக்கை அதிகம் இருக்கும் பிரதேசங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
கொழும்பு மாநகர சபை எல்லைப் பிரதேசத்தில் கடந்த ஒருவாரத்தில் அதிகளவு கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேவேளை அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான பிரதேசங்களை இனங்;கண்டு, அந்த பிரதேசங்களுக்கான போக்குவரத்தை வரையறுக்க முறைமையொன்றை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், எந்தவித ஆய்வும் இல்லாமல் மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதானால் கொரோனா தொற்று நாடு பூராகவும் பரவும் அபாயம் உள்ளது.
அத்துடன் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் புதிதாக கொரோனா கொத்தணிகள் உருவாகிவருக்கின்றன. தொழில்சாலைகள், பொலிஸாரால் ஏற்பட்டிருக்கும் கொரோனா கொத்தணி 350 பேரைத் தாண்டியுள்ளது. சிறைச்சாலைகளிலிருந்தும் கொத்தணி உருவாகி வருகின்றது.
அதனால், புதிதாக உருவாகும் கொத்தணிகளை நாங்கள் எந்தளவுக்குக் கட்டுப்படுத்துகின்றோம் என்பதன் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் நாட்டை முற்றாக முடக்குவதா? அல்லது சாதாரண மனித வாழ்க்கையைக் கொண்டு செல்லும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை இலகுபடுத்துவதா? என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.