நட்சத்திர வாரிசாக அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பிரபலமானவர் துருவ் விக்ரம். இவர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘பைசன் காளமாடன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான பிரத்யேக போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ எனும் திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள், ‘அருவி’ மதன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். மண் மணம் மாறாத தமிழக கிராமங்களில் உள்ள கபடி வீரரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சமீர் நாயர், தீபக் செஹல், அதிதி ஆனந்த் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. படப்பிடிப்பு தொடக்கத்தின் போதே படத்தின் டைட்டிலை படக் குழுவினர் அறிவித்ததுடன், இதற்காக பிரத்யேக போஸ்டரையும் வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றனர். இதில் அடர் கருப்பு வண்ண பின்னணியில் எருமை மாடு ஒன்றின் பிரம்மாண்ட சிலையும், அதற்கு கீழ் கதையின் நாயகனான துருவ் விக்ரம் விளையாட்டு வீரருக்கான தோற்ற பொலிவுடன் அமர்ந்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
பா. ரஞ்சித் -மாரி செல்வராஜ் -துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன் காளமாடன்’ தயாராவதால்.. ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.