பொகவந்தலாவயில் 8 மணித்தியாலங்களுக்குப் பின் சிறுத்தைப் புலி உயிருடன் மீட்பு!

0
157

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ சீனாக்கலை என்.சி.பிரிவில் உள்ள 7ம் இலக்க தேயிலை மலையில் இருந்து சிறுத்தைப் புலி ஒன்று நேற்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுத்தைப்புலி வலையில் சிக்குண்ட நிலையில், எட்டு மணித்தியாலங்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். தோட்டப் பகுதியில் உள்ள ஏழாம் இலக்க தேயிலை மலைக்கு உணவு தேடி வந்த போதே இந்த சிறுத்தைப் புலி, விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிக்கு கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற நபர் ஒருவர் இந்த சிறுத்தை புலியை இனங்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சிறுத்தைப் புலி தொடர்பில் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சிறுத்தைப் புலியை மீட்பதற்கு ரந்தனிகலை மிருகவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் வரவழைக்கப்பட்டு, சிறுத்தை புலிக்கு மயக்க ஊசி ஏற்றப்பட்டு, மீட்கப்பட்டுள்ளது.