ஐசிசி மகளிர் இருபது20 துடுப்பாட்ட வீராங்கனைளுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
மகளிர் சர்வதேச இருபது20 வீராங்கனைகளின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், சமரி அத்தபது 2 இடங்கள் முன்னேறி, 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற, 3 போட்டிகள் கொண்ட பங்களாதேஷுடனான இருபது20 தொடரில் மொத்தமாக 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இது துடுப்பாட்டத் வரிசையில் முன்னேறுவதற்கு உதவியுள்ளது.
பங்களாதேஷுடனான போட்டிகளில் மொத்தமாக 125 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்ரம 12 இடங்கள் முன்னேறி 27 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அத்தொடரில் 113 ஓட்டங்களைக் குவித்த பங்களாதேஷ் அணித்தலைவி நிகர் சுல்தானா ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் 18 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இப்பட்டியலில் அவுஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் முதலிடத்தில் உள்ளார்.; அவுஸ்திரேலியாவின் பெத் மூனி 2 ஆவது இடத்திலும் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3 ஆவது இடத்திலும். அவுஸ்திரேலியாவின் மெக் லானிங் 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.
அதேவேளை மகளிர் இருபது 20 போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன் முதலிடத்தில் உள்ளார்.
இலங்கையின் இனோகா ரணவீர 4 இடங்கள் முன்னேறி 12 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். மற்றொரு இலங்கை வீராங்கனை சுகந்திகா குமாரி 33 ஆவது இடத்தையும் உதேஷிகா பிரபோதினி 38 ஆவது இடத்;தையும் பெற்றுள்ளனர்.