மக்களின் ஒன்றுகூடலை தடுக்க யாழ்.  வணிகர் கழகம் புதிய ஏற்பாடு!  

0
303

யாழ். நகரில் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் நோக்கில் யாழ். வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருள்களைக் கொள்வனவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என வணிகர் கழகத்தின் தலைவர்
இ.ஜெயசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு:

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக வடமாகாணத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், யாழ். நகரத்துக்கு வரும் பொது மக்களை இயன்றளவு குறைக்குமாறு சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

பேருந்து போக்குவரத்து தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சில வேளைகளில் தொடர்ந்து இன்னும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படலாம். அதேநேரத்தில் யாழ். நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் பொதுமக்களின் வருகையை இயன்றளவு குறைக்குமாறு நாங்கள் வர்த்தகர்களைக் கேட்டிருக்கின்றோம்.

அதேபோன்று, அதிகளவில் ஒன்று கூடாமலிருக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கின்றோம். அத்தியாவசிய பொருள்கள், உணவுப் பண்டங்கள் மற்றும் உணவகங்களிலிருந்து உணவுகள் தேவைப்படும்போது பொதுமக்கள் வீடுகளிலிருந்து கடைகளுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

தற்கால சூழ்நிலையில் இவ்வாறான செயல்பாட்டின் மூலம் நகரின் மத்தியில் மக்களின் ஒன்றுகூடலைத் தடுக்கும் முகமாக, யாழ். வணிகர் கழகத்தினரால் இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே பொது மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.