இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் தீர்மானத்திலுள்ள குழப்பங்கள் தொடர்பில் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு பின்னாலுள்ள மக்கள் விரோத அரசியல் தொடர்பிலேயே இந்தத் தலையங்கம் கவனம் கொள்கின்றது. இறுதி யுத்தத்தின்போது நிகழ்ந்ததாக நம்பப்படும் மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பதன் அடிப்படையாக இருப்பது இதுதான். தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் பொறுப்புக் கூறுமாறு கேட்கும்போது, சொந்த மக்களுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்போருக்கு இல்லையா? மக்களின் பெயரால் மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்மானங்களின் வெற்றிக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதால் பெருமிதம்கொள்ளும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்களின் தோல்விகளுக்கு பொறுப்புச் சொல்ல முற்படுவதில்லை.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களை எந்தளவு முட்டாளாக்க முடியுமோ அந்தளவுக்கு முட்டாளாக்க முயற்சிக்கின்றன. 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது அது ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில், அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களுக்கும் பிரதான பங்கிருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்தை எவ்வாறு கையாள வேண்டும்? – எவ்வாறு கையாண்டால் அது அரசியல் தீர்வில் ஒரு படியாவது முன்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என்பது தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இந்தப் பின்புலத்தில் அரசமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களை ஓர் ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு முன்னோக்கிப் பயணிக்க முடியுமென்னும் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
அன்றைய சூழலில் ஓர் ஆராக்கியமான பார்வையாகவே அது இருந்தது. ஆனால், சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவந்து, அதன் மூலம் எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட தேசிய இனப்பிரச்னையை தீர்த்துவிட முடியுமென்று தமிழ் அரசுக் கட்சி வாதிட்டது. அதன் சாத்தியமின்மையை பலரும் சுட்டிக்காட்டியபோது அதனை தமிழ் அரசுக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறெல்லாம் வாதிட்ட பின்னணியை கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றது? எவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றது? சரியான தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றதா? சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்புக்கான உறுதிமொழியை வழங்கும் தென்னிலங்கை வேட்பாளருக்கு ஆதரவளிக்கவுள்ளதாகக் கூறிய தமிழ் அரசுக் கட்சி தற்போது எந்த வாக்குறுதியின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றது? மக்களுக்கு கடந்த காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது? அவற்றுக்கு யார் பொறுப்புக் கூறுவது? மக்கள் முட்டாள்கள் என்பதால் மக்களுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியது இல்லையா – இதுதான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாடா? ஒரு புறம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் கஜேந்திரன்கள் தமிழ் மக்களை முட்டாளாக்க முடியுமென்று எண்ணிச் செயல்படும்போது – மறுபுறம், தமிழ் அரசுக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக – நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்னும் அடிப்படையில் மக்களை முட்டாளாக்கும் அரசியலை முன்னெடுத்து வருகின்றதா? மக்களை எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியுமா என்பதற்கு பதிலளிக்க வேண்டியவர்கள் மக்கள் மட்டும்தான்.