மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள், மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கக் கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 10 வது நாளை எட்டியுள்ளது.
கடந்த 15ம் திகதி முதல் சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக பண்ணையாளர்கள் கூடாரம் அமைத்துப் போராடி வருகின்றனர்.
மத குருமார்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தரப்பினர் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில், இன்றைய தினம் கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தினர் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பால் வளத்தினைக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தமுடியுமான சூழல் காணப்படும் நிலையில், அது தொடர்பில் அரசியல் தலைமைகள் பாராமுகமாகச் செயற்படுகின்றனர் என போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.