மட்டக்களப்பு மாநகரசபையில் நீண்டகாலமாக நிலவிவரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண அனைவரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நிகழ்வு இன்று மட்;டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாநகரசபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் தேசிய வாசிப்பு மாதம் மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவந்தது. இதனடிப்படையில் மாணவர்கள் மத்தியிலும் வாசகர் மத்தியிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் போட்டிகளும் நடாத்தப்பட்டன.
இதன்கீழ் இறுதி நிகழ்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் முன்னிலை வகிக்க நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு வலய கல்விபணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் நூலக மற்றும் மக்கள் மேம்பாட்டு குழு உறுப்பினருமான எஸ்.கமலரூபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நூலக வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் சிறந்த நிகழ்வுகள் மேடைகளில் அலங்கரிக்கப்பட்டன.
அத்துடன் கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தின் கலாவித்தகர் திருமதி சசிகலாராணி ஜெயராமின் மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இதன்போது பரவசமூட்டியது.