மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை கிராம உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) கொலையைக் கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகள் உடன் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு முன்பு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாந்தை மேற்கில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரச சேவைக்கு சன்மானம் ஆறடி கிடங்கா?, கொலையாளி யார்? விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், கிராம உத்தியோகத்தர் விஜியேந்திரனின் கொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம உத்தியோகத்தரான எஸ்.விஜியேந்திரன், கடந்த 3ஆம் திகதி இரவு 8 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டைப் பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.