கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளது மலேசியாவில் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து தீபகற்ப மலேசியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9 முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை இந்த ஆணை அமலில் இருக்கும். இச்சமயம் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முழு அளவில் செயல்படுத்தப்பட்டதை அடுத்து வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்தது.
இதனால் சுமார் 9 ஆயிரம் பேர் மட்டுமே நோய்த்தொற்றுக்கு ஆளாகினர். இறப்பு விகிதமும் மிகக் குறைவாகவே இருந்தது. இதனால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
இந்த நிலையில், மலேசியாவின் சபா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் வைரஸ் தொற்றுப் பரவல் வேகமெடுத்துள்ளது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது.
தினமும் புதிதாக சுமார் ஆயிரம் பேர் வரை தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இரண்டு மாதங்களுக்குள் 39,357ஆக அதிகரித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை மூன்று பேர் வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில் ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 282ஆக உள்ளது. தற்போது 11,666 பேர் கோவிட்-19 நோய்க்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும் தீபகற்ப மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் சபாவில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மற்ற மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகரிக்கத் துவங்கின. இதனால் கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் திரங்கானு உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே ஆணை பிறப்பிக்கப்படுவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 4 மாநிலங்களில் மட்டுமே நடமாட்டக் கட்டப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படவில்லை