ஐசிசி இருபதுக்கு20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் ரிஸ்வான் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் 1155 நாட்கள் முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் 2 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் இருபதுக்கு20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொஹமட் ரிஸ்வான் துடுப்பாட்டமானது, அவர் இந்த தரவரிசை பட்டியலில் முன்னேற உதவியுள்ளது.
பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் மொஹட் ரிஸ்வான் ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களும், முதல் சுற்றில் ஹொங்கொங் அணிக்கு எதிராக 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் எடுத்தார். இதனால் 815 போனஸ் புள்ளிகளை எட்ட முடிந்தது.
இந்த துடுப்பாட்ட தரவரிசை பட்டியலில் முதன்முறையாக மொஹட் ரிஸ்வான் முதலிடம் பிடித்தார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் 192 ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார்.
மேலும், இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்கவும் இந்தப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் தரப்படுத்தலில் ஒரு இடம் முன்னேறி 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 52 ஓட்டங்களை குவித்து வெற்றிக்கு தேவையான வேகமான அடித்தளத்தை குசல் மெண்டிஸ் அமைத்தார்.
மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண தொடரின் முந்தைய இரண்டு போட்டிகளிலும் முறையே 20 மற்றும் 35 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் 37 பந்துகளில் 57 ஓட்டங்களை குவித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் 63 இடங்கள் முன்னேறி அண்மைய தரவரிசையில் 41 ஆவது இடத்தில் உள்ளார்.
இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்கவும் 11 இடங்கள் முன்னேறி 39 ஆவது இடத்தில் உள்ளார்.
மேலும், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ஷவும் தரவரிசையில் 31 இடங்கள் முன்னேறி 68 ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்த இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா 4 இடங்கள் முன்னேறி 13 ஆவது இடத்தையும், பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்துகளில் 60 ஓட்டங்களை குவித்த விராட் கோலியும் முன்னேறி 29 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானின் 20 வயது துடுப்பாட்ட வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் 14 இடங்கள் முன்னேறி தற்போது 15 ஆவது இடத்தில் உள்ளார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இருபதுக்கு 20 பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன 5 இடங்கள் முன்னேறி 8 ஆவது இடத்திலும், வனிந்து ஹசரங் 9 ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் 3 இடங்கள் முன்னேறி 6 ஆவது இடத்திலும் உள்ளனர்.