மாகாண முறைமையை நீக்க ஒருபோதும் இணங்க முடியாது – சஜித் தரப்பு

0
258

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படை நடவடிக்கையாகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது.

தற்போது 30 வருடங்கள் வரை கடந்துள்ள நிலையில், அதன் நன்மை தீமை குறித்து, கருத்துக்களை முன்வைக்க முடியும்.

இந்தக் காலகட்டத்தில் அதனைச் செயல்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து, அதனை நிரந்தரமாகக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, அதனை நீக்குவதற்கு நாம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை.

மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளுக்கு, மாகாண சபையின் மொத்த செலவில் 0.5 வீதமே செலுத்தப்படுகின்றது.

அனைத்து ஏனைய செலவுகளும், மாகாண சபையின் ஊடாக, கல்வி, சுகாதாரம், வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்குத் தேவையான முன்னுரிமையான திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.