ஒரு கடற்றொழில் அமைச்சர் என்பதற்கு அப்பால் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பேசிவருகின்றார். இராமலிங்கம் சந்திரசேகர் ஜே.வி.பியின் நீண்டகால உறுப்பினர். பல வருடங்களாக வடக்கில் நிலை கொண்டு செயல்பட்டு வருகின்றார். அவர் கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சராக நியமியக்கப்பட்டமையானது, வரமா அல்லது சாபமா என்னும் கேள்வியுமுண்டு.
ஏனெனில் கோட்டாபய ராஜபக்ஷ கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்திருந்தார். உண்மையில் ஒரு பெரும்பான்மை இனத்தவரைத்தான் அந்தப் பொறுப்புக்கு நியமித்திருக்க வேண்டும். ஆனால், திட்டமிட்டு, வடக்கு மாகாண தமிழ் அரசியல்வாதியான – அதேவேளை, தமிழ் நாட்டு அரசியல் சூழலில் எதிர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருக்கும் டக்ளஸ் தோவானந்தாவை நியமித்தார். இதன் மூலம், இலங்கையின் கடல் எல்லைகள் தொடர்பான பிரச்னையை வெறுமனே வடக்கு மாகாணத்திற்கும் தமிழ் நாட்டு மீனவர்களுக்குமான பிரச்னையாக சுருக்கினார்.
டக்ளஸூம் வேறு வழியின்றி பதவிக்காக தலையசைத்தார். தனது பங்கிற்கு பல விடயங்கள் தொடர்பில் பேசினார். ஆனால், மீனவர்களின் பிரச்னைக்கான தீர்வு விடயத்தில் ஒரு குண்டூசி அளவு கூட அவரால் முன்னேற்றங்களை காண்பிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கடும் தொனியிலும் டக்ளஸ் பேசினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை – எனெனில், தமிழ் நாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிப்பு அதற்கு எதிரான வடக்கு மீனவர்களின் குரல்கள் என்பவை ஒரு நெடுங்கால பிரச்னை – மூன்று அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட, மிகவும் சிக்கலான பிரச்னை.
அதற்கு நிரந்தரத் தீர்வு காண்பது முயலில் கொம்பைத் தேடுவதற்கு ஒப்பானது. முயலில் கொம்பைப் தேடுமாறு, டக்ளஸ் தேவானந்தாவிடம், கோட்டாபய பணித்திருந்தார் – தற்போது, அந்தப் பொறுப்பை இராமலிங்கம் சந்திரசேகரிடம் அநுரகுமார திஸநாயக்க ஒப்படைத் திருக்கின்றார். இதற்கிடையில் வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதில் சீனா ஆர்வம் காண்பித்து வருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
மீன்பிடித் தொழில்தான், சீனாவின் அதிக கரிசனைக்குரிய விடயமாகும் – ஏனெனில் மீனவர்கள்தான் அதிருப்தியுடன் இருக்கின்றனர். இதனையும் சந்திரசேகர் சமாளிக்க வேண்டும். டக்ளஸ் வடக்கு மாகாண அரசியல்வாதி, அதேவேளை தமிழ் நாட்டு அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்பை சம்பாதித்திருந்த ஒருவர் – அவரால் நேரடியாக தமிழ் நாட்டு அரசாங்கத்தோடு பேச முடியாத நிலைமையிருந்தது. ஆனால் அவ்வாறான பிரச்னைகள் சந்திரசேகருக்கு இல்லைதான். எனினும் இந்தப் பிரச்னையை கையாள்வது மிகவும் சவாலானது. ஆரம்பத்தில் அனைத்தும் சுமுகமாக இருப்பது போன்ற தோற்றம் தெரியக் கூடும். ஆனால், சில மாதங்கள் கழித்துத்தான், புதிய பிரச்னைகள் மேற்பரப்பிற்கு வரும். இராமலிங்கம் சந்திரசேகர் எவ்வாறு இந்தப் பிரச்னையை கையாளப் போகின்றார்?