31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மீனவர் பிரச்னை

வடபுல மீனவர் அமைப்புகள் இந்தியத் துணைத் துதரகத்தை முற்றுகையிடும் வகையில் தங்களது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருக்கின்றனர்.
மீனவர் பிரச்னை ஒரு புதிய விடயமல்ல – இது பல வருடகால பிரச்னை.
ஆரம்ப காலத்தில் இவ்வாறானதொரு பிரச்னை இருந்ததில்லை.
யுத்த காலத்திலும் இவ்வாறான விடயங்கள் பேசப்பட்டதில்லை.
தற்போது இந்த விடயம் அதிகம் பேசப்படுகின்றது.
உண்மையில், இந்த விடயத்தில் கடற்றொழில் அமைச்சே நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி உயர்மட்டத்தில் இந்த பிரச்னையை கையாள்வது தொடர்பில் பேசியிருக்க வேண்டும்.
இந்திய துணைத் தூதரகம் பிரச்னையை தீர்க்க வேண்டுமாயின், பின்னர் எதற்காக ஒரு கடற்றொழில் அமைச்சு இருக்க வேண்டும் – எனவே வடபுல மீனவர்கள் தங்கள் முற்றுகையை கடற்றொழில் அமைச்சுக்கு முன்னால்தான் முன்னெடுத்திருக்க வேண்டும்.
இது இரண்டு நாடுகள் தொடர்புபட்ட விடயம்.
அண்மையில், இந்த விடயம் தொடர்பில் தமிழ்நாட்டு மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
தாங்கள் அத்துமீறவில்லை, இலங்கை கடற்படை பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தங்களின் மீனவர்களை கைது செய்வதாக அவர்கள் முறையிட்டிருந்தனர்.
இப்போது என்ன செய்வது? உண்மையில், இது அரசியல் இலாபம் தேடும் பிரச்னையல்ல.
இதேவேளை வீடு எரிகின்றபோது, அகப்பட்டதைக் கொள்ளிக்கட்டையாக்கிக் கொள்வோம் என்று எண்ணும் சக்திகளுக்கான வாய்ப்பாகவும் இந்தப் பிரச்னை மாறிவிடக்கூடாது.
இதனை மிகவும் நிதானமாகவும் தூரநோக்குடனும் கையாள வேண்டும்.
மீனவர்களின் ஆதங்கத்தில் நியாயமுண்டு.
ஆனால், அவர்களைப் போன்று அரசியல்வாதிகளும் உணர்ச்சிவசப்பட்டு விடயங்களை கையாளக்கூடாது.
இதற்கான நிரந்தரத் தீர்வை காணும் முயற்சிகளில் அனைத்துத்தரப்புகளும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும்.
கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கட்சியினர் கடலில் இறங்கியும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.
ஏனெனில், இந்திய – இலங்கை மீனவர் விவகாரம் இவ்வாறான போராட்டங்களால் தீர்ந்து விடக் கூடியதல்ல – அவ்வாறாயின், இந்தப் பிரச்னை எப்போதோ தீர்ந்திருக்கும்.
இது வாழ்வாதார பிரச்னையாக இருக்கின்றது என்றால் இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சு ஒரு முறையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த மூன்று வருடங்களை கணக்கில் கொண்டு அந்த ஆய்வை மேற்கொள்ளலாம்.
இந்திய மீனவர்கள் வடபுல கடல் எல்லைக்குள் அத்துமீறியிருக்கின்றார்களா? எவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்துமீறியிருக்கின்றனர் அவை திட்டமிடப்பட்ட அத்துமீறல்களா அல்லது எல்லையை சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் இடம்பெற்ற செயலா? ஏனெனில், இலங்கை கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
கைதுகள் இடம்பெறுகின்றன.
இந்திய மீனவர்கள் அத்துமீறுவதை அவதானித்தால் கடற்படையினர் அவர்களை அப்பகுதியிலிருந்து, அகற்ற முடியும்.
ஆனால், அவ்வாறு நிகழ்வதில்லை மாறாக முரண்பாடுகளே தீவிரமடைகின்றன.
முதலில் கடற்றொழில் அமைச்சு இவ்வாறானதோர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் விடயங்களை கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் இரு நாடுகளும் இணைந்து விடயங்களை கையாள முடியும் – அவ்வாறில்லாது, மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதன் ஊடாக இந்தப் பிரச்னையை ஒருபோதுமே கையாள முடியாது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles