மேல் மாகாணத்தில் கடந்த 10 நாள்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் நெடுஞ்சாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கொழும்பு நகர் வழமைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதரை, வாழைத்தோட்டம், கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டி, ஆட்டுப்பட்டித் தெரு, பொரளை, புளுமெண்டல், கரையோர பொலிஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை, கிராண்ட் பாஸ் பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.
மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, மோதரையின் ரண்முத்து செவன, கிராண்ட்பாஸின் முவதொர உயன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளிலிருந்து எவரும் வெளியே செல்லவோ, எவரும் உள்ளே வரவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகமை, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா- எல, சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும். களுத்துறை மாவட் டத்தின் ஹொரணை, இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும், வேக்கடை கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.