இன்னோர் ‘அறகலய’ – அதாவது, தென்னிலங்கை மக்கள் கிளர்ச்சியை தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் படையினரை கொண்டு அதனை கட்டுப்படுத்துவேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.
பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே தென்னிலங்கை மக்கள் வீதிக்கு வந்திருந்தனர்.
பொருளாதார நெருக்கடியை அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தால் சமாளிக்க முடியாமல் போகின்றபோது மக்கள் வீதிக்கு வருவது இயல்பான ஒன்றாகும்.
கோட்டாபய ராஜபக்ஷவால் நிலைமைகளை சமாளிக்க முடியாமல் போனமையால் ரணில் விக்கிரமசிங்க மீளவும் அரசியல் அரங்குக்கு வரநேர்ந்தது.
ரணில் ஆட்சியை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து உடனடியாகவே மக்கள் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவருதற்கான முயற்சிகளையே
மேற்கொண்டார்.
இதனை ஒரு வார்த்தையில் கூறுவதனால் நாட்டை அரசை நோக்கி திருப்பும் முயற்சிகளையே ரணில் முன்னெடுத்தார்.
அரசுக்கு திருப்புதல் என்றால் என்ன? தென்னிலங்கையில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி இயல்பானதாக இருந்தாலும்கூட அதனை தங்களுடைய நீண்டகால அரசியல் முன்னெடுப்புக்களுக்கான மூலதனமாக பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன.
இதில், ஜே. வி. பியும் குமார் குணரட்ணம் தலைமையிலான முன்னிலை சோசலிஷ கட்சியும் பிரதான பங்குவகித்தன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே அலரி மாளிகை மற்றும் பிரதமர் செயலகம் கிளர்ச்சி குழுவினரால் முற்றுகையிடப்பட்டன.
அலரி மாளிகை கிளர்ச்சிக்குழுக்களால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லையென்னும் நிலைமை உருவாகியது.
பொதுவாக ஒரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் – அவர்கள் எவ்வாறான நோக்கங்களை கொண்டிருந்தாலும்கூட ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை கைப்பற்றினால், அது அரசின் வீழ்ச்சியின் அடையாளமாகவே நோக்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தையும் கைப்பற்றுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறானதொரு சூழலில்தான் ரணில் தனது அதிகாரத்தை முழு அளவில் பயன்படுத்தி நிலைமைகளைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார்.
அலரி மாளிகை, பிரமதர் செயலகம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களெனப் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர்.
அரசை கேள்விக்கு உள்ளாக்க முற்பட்டவர்கள் என்னும் அடிப்படையில்தான் இவ்வாறான கைதுகள் அனைத்தும் இடம்பெற்றன.
இதன் மூலம், ரணில் ஒரு தெளிவான செய்தியைக் கூறமுற்பட்டார்.
அதாவது, அரசை கேள்விக்கு உள்ளாக்க முற்படுபவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர்.
அரசை பாதுகாத்தல் என்று வருகின்றபோது, அதில் தாராளவாத நபர், கடும்போக்கு நபர் என்னும் பேதங்கள் இருப்பதில்லை.
இந்த அடிப்படையில்தான் தற்போது ரணில் தான் எந்த எல்லைக்கும் போவேன் என்று எச்சரித்திருக்கின்றார்.
‘அறகலய’வால் நன்மையடைந்த ஒருவர் தொடர்பில் கூறுவதனால் அது ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான்.
ஆனால், அதே ரணில் விக்கிரமசிங்க இன்னோர் அறகலயவை கட்டுப்படுத்துவதற்கு படையினரை பயன்படுத்துவேன் என்று எச்சரிக்கின்றார்.
ரணிலின் எச்சரிக்கைக்குப் பின்னால் இரண்டு செய்திகள் உள்ளன.
ஒன்று, நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகளை குழப்ப முற்படுவர்களை அனுமதிக்க முடியாது.
இரண்டு, அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கில் எவரேனும் செயல்ட்டால் அவர்கள் மீது இராணுவத்தைப் பிரயோகிப்போம்.
இவ்வாறானதோர் எச்சரிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் முப்படைகளின் தளபதிகளையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்திருந்தார் என்பதையும் இந்த இடத்தில் குறித்துக்கொள்ள வேண்டும்.